இந்தியாவில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய 'வருமான வரிச் சட்டம் 2025' மற்றும் 'வருமான வரி விதிகள் 2026' ஆகியவை வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்களது வருமான வரித் தாக்கலுக்கு (ITR) ஆதாரமாகப் பயன்படுத்தி வந்த மிக முக்கியமான ஆவணமான 'பார்ம் 16' (Form 16) முழுமையாக நீக்கப்பட உள்ளது. இதற்குப் பதிலாக 'பார்ம் 130' (Form 130) என்ற புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்படுவதால், வரி செலுத்துவோர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கொண்டு வந்துள்ள இந்த புதிய சீர்திருத்தத்தின்படி, இனி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு மேனுவலாக (Manual) எந்த ஒரு சான்றிதழையும் வழங்க முடியாது. புதிய 'பார்ம் 130' என்பது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஒரு ஆவணமாக இருக்கும். இது வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'டிரேசஸ்' (TRACES) போர்ட்டல் மூலம் மட்டுமே உருவாக்கப்படும். நிறுவனங்கள் தங்களது டிடிஎஸ் (TDS) விவரங்களைத் தாக்கல் செய்த பின்னரே, இந்த புதிய படிவம் தானாகவே உருவாகும் என்பதால், இதில் தவறுகள் நடக்க வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.
இந்த புதிய 'பார்ம் 130' மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டிருக்கும். முதல் பிரிவில் முதலாளி மற்றும் தொழிலாளியின் விவரங்கள் இருக்கும். இரண்டாம் பிரிவில் சம்பளம் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட வரி விவரங்கள் இடம்பெறும். மூன்றாவது மற்றும் மிக முக்கியமான பிரிவில், ஒரு ஊழியரின் மொத்த வருமானம், அவருக்குக் கிடைக்கும் வரி விலக்குகள் மற்றும் அவர் செலுத்த வேண்டிய நிகர வரி ஆகிய விவரங்கள் மிகத் தெளிவாகக் கணக்கிடப்பட்டிருக்கும். இது வரித் தாக்கல் செய்யும் முறையை இன்னும் எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆரம்பக் காலத்தில் ஊழியர்களுக்கு இது சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
'பார்ம் 16' மட்டுமல்லாது, வரி செலுத்துவோர் பயன்படுத்தி வந்த 'பார்ம் 26AS' (Form 26AS) என்பதும் இனி 'பார்ம் 168' என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதேபோல் மற்ற வருமானங்களுக்கான 'பார்ம் 16A' இனி 'பார்ம் 131' என்று அழைக்கப்படும். சுமார் 500-க்கும் மேற்பட்ட விதிகளைக் கொண்டிருந்த பழைய சட்டத்தை 333 விதிகளாகக் குறைத்து, வரித் தாக்கல் முறையை டிஜிட்டல் மயமாக மாற்றுவதே இந்த மிகப்பெரிய மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி செலுத்துவோரின் விவரங்களை இன்னும் துல்லியமாகக் கண்காணிக்கவும் முடியும் என்று அரசு நம்புகிறது.
இருப்பினும், வரும் ஏப்ரல் 2026-ல் வரித் தாக்கல் செய்பவர்கள் இப்போதே கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், மார்ச் 31, 2026 வரை நீங்கள் ஈட்டிய வருமானத்திற்குப் பழைய 'பார்ம் 16' மூலமாகவே வரித் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும் புதிய நிதியாண்டில் ஈட்டப்படும் வருமானத்திற்கு மட்டுமே இந்த புதிய விதிகள் பொருந்தும். அதாவது, 2027-ம் ஆண்டு நீங்கள் வரித் தாக்கல் செய்யும்போதுதான் இந்த 'பார்ம் 130' மற்றும் பிற புதிய படிவங்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த புதிய மாற்றங்களால் பெங்களூரு, ஐதராபாத், புனே மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தியும் உள்ளது. பழைய வரி முறையில் (Old Tax Regime) இருப்பவர்கள், இனி இந்த நகரங்களிலும் 50 சதவீத வீட்டு வாடகை படி (HRA) விலக்கைப் பெற முடியும். இதுவரை இந்தச் சலுகை சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மாற்றங்கள் ஒருபுறம் சவாலாகத் தெரிந்தாலும், தொழில்நுட்ப வசதிகள் மூலம் வரித் தாக்கல் இன்னும் வெளிப்படையாகவும் வேகமாகவும் மாறும் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.