நம்மில் பலருக்கும் கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் புளியோதரையின் சுவை வீடுகளில் வருவதில்லை என்ற ஏக்கம் உண்டு. கோயில் புளியோதரையின் அந்தத் தனித்துவமான மணத்திற்கு அவர்கள் சேர்க்கும் 'புளியோதரை பொடி' தான் மிக முக்கியமான காரணம். இந்தப் பொடியைத் தயாரிக்க மல்லி (தனியா), கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து, அதனுடன் சிறிதளவு எள்ளையும் சேர்த்து ஆறவைத்து மைய அரைக்க வேண்டும். புளியைக் கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கனமான வாணலியில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, நிலக்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துச் சிவக்க வதக்க வேண்டும்.
நல்லெண்ணெய் பயன்படுத்துவது தான் புளியோதரைக்குச் சரியான சுவையையும் மணத்தையும் கொடுக்கும். தாளித்தவுடன் பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். புளிக்கரைசல் நன்கு சுண்டி, எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் (புளிக்காய்ச்சல் பதம்), நாம் அரைத்து வைத்துள்ள ஸ்பெஷல் பொடியைத் தூவிக் கிளற வேண்டும். இந்தப் புளிக்காய்ச்சலில் ஒரு சிறு துண்டு வெல்லத்தைச் சேர்த்தால் புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு என அனைத்தும் சமமாக இருக்கும். சாதத்தை உதிரி உதிரியாக வடித்து, அகலமான பாத்திரத்தில் போட்டு ஆறவைக்க வேண்டும்.
ஆறிய சாதத்தின் மேல் சிறிது நல்லெண்ணெய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து, தயாரித்து வைத்துள்ள புளிக்காய்ச்சலைப் போட்டு மெதுவாகக் கிளற வேண்டும். கிளறிய உடனே சாப்பிடுவதை விட, குறைந்தது 2 முதல் 4 மணி நேரம் ஊறிய பிறகு சாப்பிட்டால் சுவை நரம்புகளில் நடனமாடும். இந்தப் புளியோதரை இரண்டு நாட்கள் வரை கெட்டுப்போகாது என்பதால் பயணங்களுக்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது. சுத்தமான கைவண்ணத்தில், பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த உணவின் மணமே தனி. ஒருமுறை இந்த முறையில் செய்து பார்த்தால், அப்புறம் ஹோட்டல் புளியோதரையை நீங்கள் தேடவே மாட்டீர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.