புற்றுநோய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நீண்டகால சிகிச்சையும், கீமோதெரபியால் ஏற்படும் உடல் பாதிப்புகளும்தான். அதிலும் கணையப் புற்றுநோய் மிகவும் ஆபத்தான வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆரம்பக் கட்டத்தில் இதைக் கண்டறிவது கடினம் என்பதால், பலருக்கு நோய் தீவிரமடைந்த பிறகே தெரியவருகிறது. இந்நிலையில், கணையப் புற்றுநோய்க்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள புதிய மருந்து மருத்துவ உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது. கீமோதெரபி மருந்துகளுடன் இணைந்து இந்த மாத்திரையைப் பயன்படுத்தியபோது, பல நோயாளிகளிடம் புற்றுநோய் கட்டிகள் சுருங்கியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Daraxonrasib என்று அழைக்கப்படும் இந்த மருந்து, தினமும் ஒருமுறை மாத்திரையாக எடுத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும் பெருகுவதற்கும் உதவும் RAS எனப்படும் புரதத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக KRAS மரபணு மாற்றங்கள் கணையப் புற்றுநோய் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச் செயல்பாட்டை இலக்காகக் கொண்டு புதிய மருந்து செயல்படுகிறது. பல ஆண்டுகளாக RAS புரதத்தின் செயல்பாட்டை நேரடியாகக் கட்டுப்படுத்துவது புற்றுநோய் ஆராய்ச்சியில் மிகப்பெரிய சவாலாக இருந்து வந்த நிலையில், இந்த மருந்து புதிய சிகிச்சை வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
RMC-GI-102 என்ற ஆய்வில், உடலின் மற்ற உறுப்புகளுக்கும் புற்றுநோய் பரவிய நிலையில் இருந்த 61 நோயாளிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு Daraxonrasib மாத்திரையுடன் Gemcitabine மற்றும் Nab-paclitaxel ஆகிய இரண்டு கீமோதெரபி மருந்துகளும் வழங்கப்பட்டன. இதன் முடிவுகள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 60.7 சதவீதம் பேருக்கு புற்றுநோய் கட்டிகள் சுருங்கியுள்ளன அல்லது ஸ்கேன் பரிசோதனையில் கண்டறிய முடியாத அளவுக்குக் குறைந்துள்ளன. இதில் 8.2 சதவீதம் பேருக்கு கட்டிகள் முழுமையாகக் கண்டறிய முடியாத நிலையை எட்டியுள்ளன. மேலும், 90.2 சதவீத நோயாளிகளிடம் நோய் தொடர்ந்து வளர்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய் தீவிரமடையாமல் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தின் சராசரி அளவு 12.8 மாதங்களாகப் பதிவாகியுள்ளது. சிகிச்சை தொடங்கி 12 மாதங்களுக்குப் பிறகு நோயாளிகளில் 76.6 சதவீதம் பேர் உயிருடன் இருந்ததாகவும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான FDA, 2026 ஆகஸ்ட் 26ஆம் தேதி குறிப்பிட்ட வகை கணையப் புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Rasonque என்ற வணிகப் பெயரிலும் இந்த மருந்து அறியப்படுகிறது. இருப்பினும், இந்த அனுமதி அனைத்து கணையப் புற்றுநோயாளிகளுக்கும் பொருந்தாது. ஏற்கெனவே சிகிச்சை பெற்றும் நோய் முன்னேறிய குறிப்பிட்ட வகை மெட்டாஸ்டேடிக் கணையப் புற்றுநோயாளிகளுக்காகவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஆய்வு, இதே மருந்தை நோயின் ஆரம்ப சிகிச்சையிலேயே கீமோதெரபியுடன் இணைத்துப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்கிறது.
மருந்தின் விலைதான் இந்திய நோயாளிகளுக்கு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அமெரிக்காவில் இதன் 30 நாட்களுக்கான பட்டியல் விலை சுமார் 39,800 டாலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.38 லட்சம் ஆகும். இவ்வளவு அதிகமான விலை காரணமாகப் பல நோயாளிகளுக்கு இந்த மருந்தை வாங்குவது சவாலாக இருக்கலாம். மேலும், அமெரிக்காவில் அனுமதி கிடைத்திருப்பதால் இந்தியாவிலும் உடனடியாகப் பயன்படுத்த முடியும் என்று அர்த்தமில்லை. இந்தியாவில் மருந்து ஒழுங்குமுறை அமைப்பின் அனுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான நடைமுறைகள் முடிவடைய வேண்டும். எனவே, இந்திய நோயாளிகளுக்கு இந்த மருந்து எப்போது கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
தற்போது நடத்தப்பட்டிருப்பது குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வுதான். கீமோதெரபி மட்டும் பெற்ற நோயாளிகளுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பார்க்கும் பெரிய அளவிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகின்றன. இதற்காக RASolute-303 என்ற மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் புதிய மருந்து கலவையானது வழக்கமான கீமோதெரபியைவிடச் சிறந்த பலனைத் தருகிறதா என்பது உறுதி செய்யப்படும்.
மாத்திரை வடிவில் இருப்பதால் பக்கவிளைவுகள் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது. தோல் அரிப்பு, வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், குமட்டல், வாந்தி மற்றும் உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, மருத்துவர்களின் கண்காணிப்பில் மட்டுமே இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். நோயாளிகள் தாங்களாகவே இந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்துவது ஆபத்தானது.
கணையப் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் இந்தப் புதிய மருந்து ஒரு முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக RAS மரபணு மாற்றங்கள் மற்ற சில புற்றுநோய்களிலும் தொடர்புடையதாக இருப்பதால், எதிர்காலத்தில் இந்த மருந்து பிற புற்றுநோய்களுக்கும் உதவுமா என்ற ஆய்வுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இருப்பினும், பெரிய அளவிலான மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளுக்குப் பிறகே இதன் உண்மையான பலனைத் தீர்மானிக்க முடியும். தற்போது கிடைத்துள்ள முடிவுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், புற்றுநோய்க்கான முழுமையான தீர்வு கிடைத்துவிட்டதாகக் கூற முடியாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.