கிரெடிட் கார்டு  
லைஃப்ஸ்டைல்

பில் கட்ட லேட்டானாலும் கவலை வேண்டாம்! 3 நாட்கள் 'ஃப்ரீ' டைம் கொடுத்த ஆர்பிஐ - கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்!

இது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ள விஷயமாகப் பார்க்கப்படுகிறது...

மாலை முரசு செய்தி குழு

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு என்பது பலருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. ஆனால், அவசர வேலைகளுக்கு நடுவில் கிரெடிட் கார்டு பில் கட்ட வேண்டிய கடைசி தேதியை நாம் மறந்துவிடுவது உண்டு. அப்படி பில் கட்டத் தவறுபவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு மிகச்சிறந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள ஆர்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் மற்றும் குறைந்த கட்டணச் சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இனி பில் கட்ட வேண்டிய தேதி முடிந்துவிட்டதே என்று பதற்றப்படத் தேவையில்லை.

புதிய விதிகளின்படி, பில் கட்ட வேண்டிய கடைசி தேதி முடிந்த பிறகும் வாடிக்கையாளர்களுக்கு 3 நாட்கள் கூடுதல் அவகாசம் (Grace Period) வழங்கப்படும். உதாரணமாக, உங்கள் கிரெடிட் கார்டு பில் கட்ட வேண்டிய தேதி ஒரு மாதத்தின் 5-ஆம் தேதி என்றால், நீங்கள் 8-ஆம் தேதி வரை எந்தவித அபராதமும் இன்றி பில் தொகையைச் செலுத்தலாம். இந்த மூன்று நாட்களில் நீங்கள் பில் கட்டினால் வங்கி உங்களிடம் லேட் பீஸ் (Late fees) வசூலிக்காது. இது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ள விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவென்றால், இனி லேட் பீஸ் என்பது முழு பில் தொகைக்கும் கணக்கிடப்பட மாட்டாது. நீங்கள் கட்டத் தவறிய மீதமுள்ள தொகைக்கு (Outstanding balance) மட்டுமே அபராதம் விதிக்கப்படும். இது வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையை வெகுவாகக் குறைக்கும். இருப்பினும், அந்த மூன்று நாள் அவகாசத்திற்குப் பிறகும் நீங்கள் பில் கட்டவில்லை என்றால், அது 'நிலுவைத் தொகை' எனக் கருதப்படும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை (Credit Score) பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால், அந்த மூன்று நாட்களுக்குள் பணத்தைச் செலுத்துவது அவசியமாகும்.

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆர்பிஐ சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இனி அத்தகைய பாதிப்புகள் ஏற்படும் போது, வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் வரை காத்திருக்காமல், வங்கிகளே முன்வந்து அவர்களுக்குச் சலுகைகளை வழங்கலாம். இந்த புதிய கிரெடிட் கார்டு விதிகள் 2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. பேரிடர் தொடர்பான நிவாரண விதிகள் 2026 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும். இதுதவிர கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தை எளிமையாக்கவும் ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறது. இது விவசாயத் துறையில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.