லைஃப்ஸ்டைல்

எலான் மஸ்க்கையே மிஞ்சும் ‘Sheru Bhai’ - இணையத்தைக் கலக்கும் ஏஐ வீடியோக்கள்.. நேரத்தை வீணாக்கும் சத்தமில்லா ஆபத்து!

அடுத்தடுத்த பகுதிகளைத் தேடுவதிலும் பயனர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டு நேரத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது...

Mahalakshmi Somasundaram

சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது டிரெண்டுகள் உருவாகி வரும் நிலையில், சில மாதங்களாகவே ஏஐ வைத்து தயாரிக்கப்படும் அடுத்தடுத்த பகுதிகளாக வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ‘தலுக்கு முழுக்கு தக்காளி’ என தக்காளி, மாங்காய் மற்றும் தேங்காயை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வீடியோ வைரலாகி வந்தது. தற்போது அதை பின்னுக்கு தள்ளும் விதமாக ‘Sheru Bhai’ என்ற சிங்கத்தை வைத்து உருவாக்கப்பட்ட ஏஐ கதாபாத்திரம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் உள்ளிட்ட தளங்களில் இந்தக் கதாபாத்திரம் இடம்பெறும் வீடியோக்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

Sheru Bhai கதாபாத்திரம்

‘Sheru Bhai’ என்பது உண்மையான நபர் அல்ல. மனித உடலுடன் சிங்கத்தின் தலையைக் கொண்ட கற்பனைக் கதாபாத்திரம். வெள்ளை அல்லது கருப்பு நிற கோட், தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த கைக்கடிகாரம், கூலிங் கிளாஸ் எனப் பணக்காரத் தோற்றத்தில் வலம் வரும் இந்தச் சிங்கம், ஏலத்தில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குவது, சொகுசு கார்கள் மற்றும் அரண்மனைகளை வாங்குவது போன்ற காட்சிகள் வீடியோக்களாக உருவாக்கப்படுகின்றன. சில வீடியோக்களில் தனது எதிரிகளைத் தோற்கடிப்பது, பணத்தை வைத்து குடும்பத்தினருக்கு உதவுவது போன்ற கதைகளும் இடம்பெறுகின்றன.

இந்த சிங்கத்தின் வீடியோவை பார்க்கும் இணையவாசிகள் நிஜ பணக்கர்களான அம்பானி, எலன் மாஸ்க் போன்றவர்களுக்கே இந்த ‘Sheru Bhai’ போட்டியாக வந்துவிடுவார் என விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர் ‘Sheru Bhai’ போல பணக்காரர் ஆக வேண்டும் என  கமெண்ட் செய்து வருகின்றனர். ‘Sheru Bhai’ மற்றும் ‘தலுக்கு முழுக்கு தக்காளி’ ஆகியவை அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் கற்பனைக் காட்சிகளாகும். அடுத்ததடுத்த பகுதியாக வெளியாகும் இந்த ஏஐ வீடியோக்களை சமூக வலைதள பயனர்கள்அதிகமாக தேடி பார்த்து வருவதாக  தனியார் நிறுவன  கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

நேரத்தை இழக்கும் அபாயம்

அதாவது, ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் வெளியாகும் சீரியல்களுக்கு மக்கள் அடிமையாகி இருந்தது போல தற்போது இந்த வீடியோக்களுக்கு இணையவாசிகள் எந்த பயனும் இல்லாமல் அடிமையாகி வருகின்றனர். இந்த வீடியோக்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரே கதாபாத்திரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்களுக்கெனப் புதிய கதைகளை உருவாக்க முடிகிறது. இதனால் பல்வேறு சமூக வலைதளக் கணக்குகளில் ஒரே மாதிரியான கதாபாத்திரம் வெவ்வேறு சம்பவங்களில் தோன்றுகிறது. ஆனால், இந்த வீடியோக்களைப் பார்ப்பதிலும் அடுத்தடுத்த பகுதிகளைத் தேடுவதிலும் பயனர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டு நேரத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது.

உளவியல் பாதிப்புகள்

இந்த வீடியோக்களை பார்க்கும் அனைவருக்கும் இல்லையென்றாலும் வீடியோக்களுக்கு அடிமையாகும் குறிப்பிட்ட சிலருக்கு “உயிரற்ற ஒரு பொருளுக்கு மனிதப் பண்புகளை ஏற்றி ( Anthropomorphism ) அதை தொடர்ந்து பார்க்கும்போது அந்தக் கதாபாத்திரங்களுடன் ஒருவித உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஏற்படலாம். இதனை ‘Parasocial Attachment’ என்று குறிப்பிடுவார்கள்.

அதே போல இந்த ஏஐ வீடியோவின் ஒவ்வொரு பாகத்திலும் நகைச்சுவை, சோகம், சண்டை, எதிர்பாராத திருப்பம் என அடுத்தடுத்து நிலையற்ற மாறுபட்ட உணர்வுகள் இடம்பெறுகிறது. இதனால் இவை நமக்கு அடுத்த பாகம் குறித்த ஆர்வத்தைத் தூண்டி, முடிவடையாத கதையைப் பார்க்கும் எதிர்பார்ப்பு ஒரு “Curiosity Loop” போன்ற உணர்வை உருவாக்கலாம்.

இது போல அடுத்த பாகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் அன்றாட வேலைகளைத் தள்ளிப்போடுவது (Procrastination), தூக்கத்தைத் தவிர்ப்பது அல்லது தூக்கத்தைப் பாதிக்கும் அளவுக்குத் தொடர்ந்து பார்ப்பது போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கட்டாயம் பாதிப்பு ஏற்படும் என உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு யாருக்கேனும் இந்தப் பழக்கம் அன்றாட வாழ்க்கை, தூக்கம் மற்றும் செயல்பாட்டைப் பாதிக்கத் தொடங்கினால் உளவியல் நிபுணரின் உதவியை நாடுவது அவசியம்.

ஏஐ வீடியோக்கள் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் ஏற்படும் மனநல பாதிப்புகள் குறித்து விளக்கமளித்து இந்த செய்திக்கு உதவிய உளவியல் நிபுணர்  “T. கௌசல்யா” அவர்களுக்கு நன்றி

ஒரு சில நொடிகள் பொழுதுபோக்காக தொடங்கும் வீடியோக்கள், தொடர்ச்சியாக ஸ்க்ரோல் செய்யத் தூண்டி நம்மை அறியாமலே நமது விலைமதிப்பற்ற நேரத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஏஐ தொழில்நுட்பம் பொழுதுபோக்குக்கும் படைப்பாற்றலுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கினாலும், அதன் பயன்பாட்டில் நேரக் கட்டுப்பாடும் விழிப்புணர்வும் அவசியம். இல்லையெனில், சில நிமிடப் பொழுதுபோக்குக்காக தொடங்கும் சமூக வலைதளப் பயன்பாடு, நமது நேரத்தை சத்தமின்றி விழுங்கும் பழக்கமாக மாறிவிடலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.