லைஃப்ஸ்டைல்

ஆண்களே ஆண்களை "அத்தான்" என கூப்பிடும் உறவு முறை.. தமிழ் கலாச்சாரத்தில் இருக்கும் இந்த உணர்வுப்பூர்மான உறவுமுறையின் பின்னணி!

ஒருவர் தனது அக்காவின் கணவரிடம், 'அத்தான் எப்ப வந்தீங்க?' என்று கேட்பதும் இயல்பு.

மாலை முரசு செய்தி குழு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளின் குடும்பப் பேச்சுகளில் ஒரு ஆண் இன்னொரு ஆணிடம்,

“சொல்லுங்க அத்தான்..” என்று மிகவும் இயல்பாகப் பேசுவதை இன்றும் கேட்க முடியும். இதைக் கேட்கும் அடுத்த தலைமுறையினரில் சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம்.

ஆண்கள் ஏன் இன்னொரு ஆணை ‘அத்தான்’ என்று அழைக்கிறார்கள்? அதற்குப் பின்னால் இருப்பது வெறும் வட்டார வழக்கு அல்ல. பல தலைமுறைகளாகத் தமிழர்களிடம் இருந்து வந்த ஒரு விரிவான உறவுமுறை.

‘அத்தான்’ என்றால் கணவர் மட்டும் அல்ல!

இன்று திரைப்படங்களிலும் பாடல்களிலும் “அத்தான்” என்ற சொல் வந்தாலே, ஒரு பெண் தனது கணவரையோ காதலரையோ அழைக்கும் வார்த்தை என்ற எண்ணமே பலருக்கும் முதலில் வருகிறது. ஆனால் தமிழின் பாரம்பரிய உறவுப் பெயர்களில் அதன் அர்த்தம் அதைவிடப் பெரியது.

சென்னைப் பல்கலைக்கழக Tamil Lexicon-ல் அத்தை மகன், வயதில் மூத்த தாய்மாமன் மகன், மனைவியின் மூத்த சகோதரர், அக்காளின் கணவர் ஆகிய உறவுகளுக்கும் ‘அத்தான்’ என்ற பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்–தமிழ் அகரமுதலியிலும் இதே சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது, ஒருவர் தனது அக்காவின் கணவரிடம், 'அத்தான் எப்ப வந்தீங்க?' என்று கேட்பதும் இயல்பு. மனைவியின் அண்ணன் போன் செய்தால், சொல்லுங்க 'அத்தான்' என்று பேசுவதும் இயல்பு.

இங்கே ‘அத்தான்’ என்பது அன்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் செல்லப்பெயர் அல்ல. அந்த மனிதர் குடும்பத்தில் எந்த உறவாக நிற்கிறார் என்பதைச் சொல்லும் பெயர். அதுதான் பழைய தமிழ் குடும்பங்களின் அழகு!

இன்றைய தலைமுறைக்கு எல்லோரும் Cousin. திருமணம் நடந்துவிட்டால் Brother-in-law. ஆனால் பழைய தமிழ் குடும்ப அமைப்பு அப்படி இரண்டு மூன்று வார்த்தைகளில் உறவுகளை முடித்துவிடவில்லை.

தமிழகத்தின் பாரம்பரிய குடும்ப முறைகளில் எல்லா cousin உறவுகளும் ஒரே மாதிரியாகப் பார்க்கப்படவில்லை. அப்பாவின் சகோதரருடைய குழந்தைகளும், அம்மாவின் சகோதரியின் குழந்தைகளும் பல குடும்பங்களில் அண்ணன்–தம்பி, அக்கா–தங்கை உறவைப் போலவே கருதப்பட்டனர். ஆனால் அப்பாவின் சகோதரியான அத்தையின் குடும்பமும், அம்மாவின் சகோதரரான மாமாவின் குடும்பமும் வேறு உறவு வரிசையில் இருந்தன.

மானுடவியல் ஆய்வுகளில் இத்தகைய உறவுகள் ‘cross-cousin’ உறவுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. தமிழகத்தின் பல சமூகங்களில் இவ்வகை உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்குகளும் இருந்திருக்கின்றன; ஆனால் அது எல்லா சமூகங்களுக்கும், எல்லா காலத்துக்கும் பொதுவான விதி அல்ல. இதனால்தான் ‘முறைப் பெண்’, ‘முறை மாப்பிள்ளை’ போன்ற சொற்களும் நம் குடும்ப வழக்கில் உருவாகின.

இந்த உறவு அமைப்பின் தாக்கம் நாம் ஒருவரை எப்படி அழைத்தோம் என்பதிலும் தெரிகிறது. அதன் ஒரு பழைய அடையாளம்தான் 'அத்தான்’.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. தமிழில் பல உறவுப் பெயர்களை ஆங்கிலத்துக்கு நேரடியாக மொழிப்பெயர்க்க செய்யவே முடியாது. ‘அத்தான்’ என்பதற்கு simply “Brother-in-law” என்று சொன்னால் முழு அர்த்தமும் கிடைத்துவிடாது. ஏனெனில் Brother-in-law என்பது பல உறவுகளை ஒரே வார்த்தைக்குள் கொண்டு வருகிறது.

சமீபத்திய தலைமுறைக்கு இந்த உறவுமுறையை மீண்டும் நினைவுபடுத்திய முக்கியமான உதாரணம் ‘மெய்யழகன்’. தஞ்சைப் பகுதி குடும்பப் பின்னணியில் நகரும் அந்தப் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் அரவிந்த்சாமியை தொடர்ந்து 'அத்தான்' என்று அழைக்கும் விதம் பலருக்கும் கவனத்தை ஈர்த்தது. படமே குடும்பம், சொந்த ஊர், பிரிந்துபோன உறவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டதால் அந்த ஒரு வார்த்தைக்கும் கதையில் தனி உணர்வு கிடைத்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்