இந்திய இருசக்கர வாகன சந்தையில் நீண்ட காலமாகவே இளைஞர்களின் கனவு வாகனமாகத் திகழ்வது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள்தான். குறிப்பாக பட்ஜெட் விலையில் ஒரு கம்பீரமான பைக்கை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ராயல் என்ஃபீல்டு ஷோரூமைத் தான் முதலில் நாடுவார்கள். ஆனால், அந்த ஏகபோக உரிமையை உடைக்கும் வகையில் யமஹா நிறுவனம் தனது எக்ஸ்.எஸ்.ஆர் 155 (Yamaha XSR 155) மாடலைக் களமிறக்கியுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு சிறந்த பைக்கை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Hunter 350) சிறந்ததா அல்லது யமஹாவின் இந்த நவீன வரவு சிறந்ததா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் இந்த இரண்டு பைக்குகளின் சிறப்பம்சங்கள், குறைபாடுகள் மற்றும் எந்தப் பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
முதலாவதாக, இந்த இரண்டு பைக்குகளின் வடிவமைப்பு என்று பார்த்தால், இரண்டுமே 'ரெட்ரோ' எனப்படும் பழமையான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவற்றின் அணுகுமுறை வெவ்வேறாக உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பாரம்பரியமான வடிவமைப்பைத் தக்கவைத்துக்கொண்டு, நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்துள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வட்ட வடிவ ஹெட்லேம்ப், இண்டிகேட்டர்கள் மற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியவை அந்தப் பழைய கம்பீரத்தை நினைூட்டுகின்றன. முக்கியமாக, ஹண்டர் 350-ல் பெட்ரோல் டேங்க் உலோகத்தால் (Metal Tank) ஆனது, இது வாடிக்கையாளர்களிடம் ஒரு தனி நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மறுபுறம், யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 ஒரு 'மாடர்ன் ரெட்ரோ' பைக்காகக் காட்சி தருகிறது. இதில் எல்.இ.டி ஹெட்லேம்புகள், எல்.இ.டி இண்டிகேட்டர்கள் மற்றும் தலைகீழாகப் பொருத்தப்பட்ட சஸ்பென்ஷன் (USD Forks) எனப் பல நவீன அம்சங்கள் உள்ளன. ஆனால், இதன் பெட்ரோல் டேங்க் ஃபைபர் (Fiber) பொருளால் ஆனது என்பது சிலருக்குக் குறையாகத் தெரியலாம். இருப்பினும், பைக்கின் எடையைக் குறைப்பதற்காகவே இந்த ஃபைபர் டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளதாக யமஹா தரப்பில் கூறப்படுகிறது.
அடுத்ததாக, இந்த பைக்குகளின் இதயமாகச் செயல்படும் இன்ஜின் செயல்திறனை ஒப்பிடும்போது மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கில் 350 சிசி திறன் கொண்ட, காற்றால் குளிர்விக்கப்படும் (Air-Oil Cooled) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது நீண்ட ஸ்ட்ரோக் கொண்ட இன்ஜின் என்பதால், குறைந்த வேகத்தில் அதிக இழுவிசையை (Torque) வெளிப்படுத்தும். இதனால் நெடுஞ்சாலைகளில் நிதானமாகப் பயணம் செய்வதற்கு இது மிகவும் ஏற்றது. ஆனால், யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 பைக்கில் ஆர்15 (R15) மாடலில் உள்ள அதே 155 சிசி லிக்விட் கூல்டு (Liquid Cooled) இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 350 சிசியுடன் ஒப்பிடும்போது சிறிய இன்ஜினாக இருந்தாலும், இதில் உள்ள வி.வி.ஏ (VVA) தொழில்நுட்பம் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகள் பைக்கின் செயல்திறனை வெகுவாக அதிகரிக்கின்றன. குறிப்பாக, இந்த இன்ஜின் அதிக ஆர்பிஎம்-ல் சிறப்பாகச் செயல்படும் திறன் கொண்டது.
நகர்ப்புறப் பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது என்ற கேள்விக்கு விடையாக அமைவது இவற்றின் எடைதான். யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 பைக்கின் எடை வெறும் 137 கிலோ மட்டுமே. இதனால் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் பைக்கை வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு (Maneuvering) இது மிகவும் எளிதாக இருக்கும். ஆனால், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் எடை 180 கிலோவாகும். இது யமஹாவை விட சுமார் 43 கிலோ அதிகம். இந்த அதிகப்படியான எடை நெடுஞ்சாலைகளில் செல்லும்போது காற்று வீசினால் வண்டி ஆட்டம் காணாமல் இருக்க உதவும் என்றாலும், தினமும் அலுவலகம் செல்பவர்களுக்குக் கடும் போக்குவரத்து நெரிசலில் இந்த எடையைச் சமாளிப்பது சற்றுச் சவாலான விஷயமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஹண்டர் 350 பைக்கில் இன்ஜின் வெப்பம் கால்களில் அதிகம் உணரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எரிபொருள் சிக்கனம் அல்லது மைலேஜ் என்று வரும்போது, யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெறுகிறது. குறைந்த எடை மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட இன்ஜின் காரணமாக, இந்த பைக் லிட்டருக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், 350 சிசி திறன் கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கில் லிட்டருக்கு 35 கிலோமீட்டர் வரை மட்டுமே மைலேஜ் எதிர்பார்க்க முடியும். தற்போதைய பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு மத்தியில், தினசரி பயன்பாட்டிற்கு பைக் வாங்குபவர்கள் இந்த மைலேஜ் வித்தியாசத்தைக் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம், ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கே உரிய அந்தத் தனித்துவமான சைலன்சர் சத்தம் (Exhaust Note) ஹண்டர் 350-ல் இருப்பதால், சத்தத்தை விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். யமஹாவில் அந்தச் சத்தம் இயல்பாகவே குறைவாகத்தான் இருக்கும்.
வசதிகள் என்று பார்த்தால், யமஹாவில் கொடுக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள் ராயல் என்ஃபீல்டில் இல்லை என்றே சொல்லலாம். யமஹாவில் டிஜிட்டல் மீட்டர், ஸ்லிப்பர் கிளட்ச், வி.வி.ஏ தொழில்நுட்பம் போன்றவை உள்ளன. ராயல் என்ஃபீல்டில் அனலாக் மற்றும் டிஜிட்டல் கலந்த மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கை வசதியைப் பொறுத்தவரை, ஹண்டர் 350 பைக்கின் இருக்கை உயரம் குறைவாக இருப்பதால் (800mm), உயரம் குறைவானவர்களும் எளிதாகத் தரையில் காலை ஊன்றி ஓட்ட முடியும். ஆனால், யமஹாவின் இருக்கை உயரம் சற்று அதிகம் (810mm). மேலும், யமஹாவில் பின்னால் அமர்பவர்களுக்குப் பிடித்துக்கொள்ளக் கைப்பிடி (Grab Rail) இல்லாதது ஒரு பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது. குடும்பத்துடன் பயணிப்பவர்களுக்கு ஹண்டர் 350 சற்று வசதியாக இருக்கலாம், ஆனால் யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, 1.5 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் பைக் வாங்க நினைப்பவர்கள் தங்கள் தேவையை முதலில் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் தினமும் நகருக்குள் அதிக தூரம் பயணிக்கிறீர்கள், உங்களுக்கு அதிக மைலேஜ் மற்றும் எளிதாகக் கையாளக்கூடிய எடை குறைந்த பைக் வேண்டும் என்றால் யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் 155 ஒரு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இல்லை, எனக்கு மைலேஜ் முக்கியமல்ல, ராயல் என்ஃபீல்டு என்ற பிராண்ட் மதிப்பும், அந்தத் தனித்துவமான சத்தமும், நெடுஞ்சாலைப் பயணங்களுக்கான கனமான பைக்கும் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஹண்டர் 350 மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். எது எப்படியோ, இந்தியச் சாலைகளில் இந்த இரண்டு பைக்குகளுமே தங்களுக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளன என்பது மட்டும் நிதர்சனம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்