சர்க்கரை வியாதி அல்லது டயாபடீஸ் என்பது இன்று பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது இதயம், சிறுநீரகம் மற்றும் கண்கள் என உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதற்காக நீண்ட காலமாக மெட்பார்மின் (Metformin) என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது ஓசெம்பிக் (Ozempic) போன்ற நவீன மருந்துகள் மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகின்றன. இந்த இரண்டு மருந்துகளில் எது சிறந்தது மற்றும் எதில் பக்கவிளைவுகள் குறைவு என்பதைப் பற்றி டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் சப்தரிஷி பட்டாச்சார்யா விளக்கியுள்ளார்.
மெட்பார்மின் மருந்து என்பது பொதுவாக டைப் 2 டயாபடீஸ் நோயாளிகளுக்கு முதலில் பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்தாகும். இது முக்கியமாக கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைப்பதோடு, உடல் இன்சுலினுக்குச் சரியாக ரியாக்ட் செய்யவும் உதவுகிறது. மறுபுறம், ஓசெம்பிக் போன்ற மருந்துகளில் உள்ள செமாக்ளுடைடு (Semaglutide) என்ற வேதிப்பொருள், உடலில் உள்ள ஹார்மோன்களைப் போலவே செயல்பட்டு இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் இது பசியைக் கட்டுப்படுத்தி, உணவானது வயிற்றில் இருந்து மெதுவாக வெளியேறவும் வழிசெய்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயராமல் தடுக்கப்படுகிறது.
செயல்திறனைப் பொறுத்தவரை, இரண்டு மருந்துகளுமே இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் கில்லாடியாக இருக்கின்றன. குறிப்பாக, கடந்த மூன்று மாத காலச் சர்க்கரை அளவைக் குறிக்கும் HbA1c அளவை மெட்பார்மின் 1% வரை குறைத்தால், ஓசெம்பிக் 1.5% முதல் 2% வரை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஓசெம்பிக் மருந்து உடல் எடையைக் குறைப்பதிலும், இதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதுகாப்பதிலும் கூடுதல் நன்மைகளைத் தருகிறது. ஃபேட்டி லிவர் (Fatty liver) போன்ற கல்லீரல் பாதிப்புகளையும் குணப்படுத்த இது உதவியாக இருக்கும் என்று அமெரிக்காவின் எஃப்டிஏ (FDA) அங்கீகரித்துள்ளது.
எந்த மருந்தாக இருந்தாலும் அதில் சில பக்கவிளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. மெட்பார்மின் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாயில் ஒருவித மெட்டாலிக் டேஸ்ட் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் இவை பெரும்பாலும் லேசானதாகவே இருக்கும். அதேசமயம் ஓசெம்பிக் மருந்தும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்கலாம். சிகிச்சையின் ஆரம்ப வாரங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், சில நோயாளிகள் இந்த மருந்தைத் தொடரத் தயங்குகிறார்கள். மேலும், அரிதான சிலருக்கு கணைய அழற்சி மற்றும் கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் வரலாம் என்பதால், மருத்துவரின் தீவிர கண்காணிப்பு அவசியம்.
இறுதியாக, மெட்பார்மின் அல்லது ஓசெம்பிக் இரண்டில் எது பெஸ்ட் என்று பார்த்தால், அது நோயாளியின் உடல்நிலை மற்றும் தேவையைப் பொறுத்தது. மெட்பார்மின் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாலும், நீண்ட காலப் பாதுகாப்பு இருப்பதாலும் பலருக்கும் இதுவே முதல் தேர்வாக இருக்கிறது. ஆனால் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும், இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களுக்கும் ஓசெம்பிக் ஒரு வரப்பிரசாதமாக அமையும். சில நேரங்களில் இரண்டு மருந்துகளையும் சேர்த்தும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். எதுவாக இருந்தாலும், நீங்களாக எந்த மருந்தையும் எடுக்காமல் தகுந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டரின் ஆலோசனைப்படி நடப்பதே உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.