google growth 
வணிகம்

சாதாரண ஆராய்ச்சித் திட்டத்திலிருந்து உலகளாவிய வல்லரசாக.. கூகுள் நிறுவனத்தின் வியத்தகு வளர்ச்சி!

வெறும் 27 ஆண்டுகளில் இந்த நிறுவனம் உலகத்தின் தொழில்நுட்ப வல்லரசாக மாறியது எப்படி? - இது குறித்து விரிவான ஆய்வுகளை இங்கே காணலாம்.

மாலை முரசு செய்தி குழு

இன்று உலகின் அத்தனைத் தகவல்களுக்கும் ஒரே சாளரமாக விளங்கும் கூகுள் (Google) நிறுவனம், செப்டம்பர் 27-ஆம் தேதியைத் தனது பிறந்தநாளாக உற்சாகமாகக் கொண்டாடி, சிறப்பு டூடுலை (Doodle) வெளியிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், இதுவே கூகுளின் உண்மையான பிறந்தநாள் அல்ல என்பதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தும் உண்மை. ஒரு நிறுவனத்தின் பிறப்புக் குறித்து ஏன் இத்தனை குழப்பம்? உண்மையான நிறுவனப் பதிவுத் தேதி எது? வெறும் 27 ஆண்டுகளில் இந்த நிறுவனம் உலகத்தின் தொழில்நுட்ப வல்லரசாக மாறியது எப்படி? - இது குறித்து விரிவான ஆய்வுகளை இங்கே காணலாம்.

கூகுள் நிறுவனம் செப்டம்பர் 27-ஆம் தேதியைத் தனது பிறந்தநாளாகக் கொண்டாடினாலும், அது சட்டப்படி அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நாள் வேறு. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்த லாரி பேஜ் (Larry Page) மற்றும் செர்ஜி பிரின் (Sergey Brin) ஆகியோரால் கூகுள் முறையாக செப்டம்பர் 4, 1998 அன்று பதிவு செய்யப்பட்டது. ஒரு நிறுவனம் தொடங்கப்பட்ட நாளைப் பதிவுத் தேதியாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். அப்படியிருக்க, ஏன் இந்தக் குழப்பமான செப்டம்பர் 27-ஆம் தேதி?

கூகுள் நிறுவனமே தனது பிறந்தநாள் தேதியை ஆரம்ப ஆண்டுகளில் பலமுறை மாற்றியுள்ளது என்பதே நிஜம். 2000-களின் ஆரம்பத்தில், சில சமயம் செப்டம்பர் 7, சில சமயம் செப்டம்பர் 8 எனப் பல தேதிகளில் பிறந்தநாள் டூடுலை அது வெளியிட்டது. 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான், செப்டம்பர் 27 என்ற தேதி நிலையானதாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் குழப்பத்திற்குக் காரணம் தெளிவாகத் தெரியாவிட்டாலும், இணையத்தில் கூகுள் தனது வலை குறியீட்டு (Web Indexing) சாதனைகளைச் செய்த மிக முக்கியமான மைல்கல்லான ஒரு நாளை நினைவு கூரவே இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே, கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பிறந்தது செப்டம்பர் 4, 1998 அன்று என்றாலும், தனது சாதனைகளைக் குறிக்கும் விதமாக, அது செப்டம்பர் 27-ஆம் தேதியைத் தனது பிறந்தநாளாகக் கொண்டாடுகிறது.

ஒரு கேரேஜில் தொடங்கிய மாபெரும் சாம்ராஜ்ஜியம்

கூகுளின் ஆரம்பம் ஒரு சிறிய ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சித் திட்டம்தான். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் இணைந்து, இணையப் பக்கங்களை அவற்றின் தரம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்த ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்தனர். இதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் 'பேக்ரப்' (Backrub). இதுவே பின்னாளில் 'கூகுள்' என்று பெயர் மாற்றம் பெற்றது.

கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான தொடக்கத்திற்கு வித்திட்டது, சௌன் மைக்ரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆண்டி பெக்டோல்ஷீம் (Andy Bechtolsheim) தான். 1998 ஆகஸ்ட் மாதம், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோருக்கு இவர் அளித்த $1,00000 (ஒரு லட்சம் டாலர்) தொகையின் மூலம்தான் கூகுள் நிறுவனம் முறையாக இயங்கத் தொடங்கியது. ஒரு சாதாரண கேரேஜில் (Garage Startup) தொடங்கப்பட்ட இந்தச் சிறிய நிறுவனம், இன்று தொழில்நுட்ப உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்ஃபாபெட் ஆதிக்கத்தின் கீழ் கூகுள்

ஆரம்பத்தில் வெறும் தேடுபொறியாக இருந்த கூகுள், காலப்போக்கில் பல புதிய தளங்களை உருவாக்கியது. ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ், ஆண்ட்ராய்டு எனப் பல தயாரிப்புகளைத் தனது குடையின் கீழ் கொண்டுவந்தது. நிறுவனத்தின் செயல்பாடுகள் விரிவடைந்த நிலையில், அதன் நிர்வாகத்தை முறைப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிகச் சுதந்திரம் அளிக்கவும், 2015-ஆம் ஆண்டு ஆல்ஃபாபெட் இன்க். (Alphabet Inc.) என்ற தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இன்று கூகுள், இந்த ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.

நிறுவனத்தை ஆரம்பித்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி இருந்தாலும், சிறப்புப் பங்குகள் மூலம் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமையைத் தக்கவைத்துள்ளனர். தற்போது சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாகப் (CEO) பொறுப்பு வகிக்கிறார்.

செப்டம்பர் 4 ஆக இருந்தாலும், செப்டம்பர் 27 ஆக இருந்தாலும், கூகுளின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது, ஒரு சிறிய யோசனை எவ்வாறு உலகம் முழுவதையும் மாற்றும் சக்தி வாய்ந்த தொழில்நுட்பப் புரட்சியாக உருவெடுத்தது என்பதன் வரலாற்றுச் சான்றாகவே விளங்குகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.