வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரித் தாக்கல் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முதலில் ஜூலை 31, 2025 ஆக இருந்தது. பின்னர், அது செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), 2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 15, 2025-லிருந்து செப்டம்பர் 16, 2025 வரை மேலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளது," என்று வருமான வரித் துறையின் அதிகாரபூர்வ X கணக்கில் இரவு 11:48 மணிக்கு பதிவிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், வருமான வரித் துறை மற்றொரு பதிவை வெளியிட்டது. அதில், திங்கள்கிழமை வரை 7.3 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது ஒரு புதிய சாதனை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
"செப்டம்பர் 15, 2025 வரை 7.3 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டின் 7.28 கோடி என்ற எண்ணிக்கையை விட அதிகம். சரியான நேரத்தில் ஒத்துழைத்த வரி செலுத்துவோர் மற்றும் நிபுணர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. மேலும் தாக்கல் செய்ய வசதியாக, காலக்கெடு ஒரு நாள் (செப்டம்பர் 16, 2025) நீட்டிக்கப்பட்டுள்ளது," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
திங்கள்கிழமை மாலை, வரி தாக்கல் செய்பவர்கள் பலரும் இணையதளத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து புகார் தெரிவித்திருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, வருமான வரித் துறை, பிரவுசர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பகிர்ந்து கொண்டது.
"வருமான வரி மின்-தாக்கல் இணையதளத்தை அணுகுவதில் சிரமம் உள்ளதா? சில சமயங்களில், உள்ளூர் கணினி/பிரவுசர் அமைப்புகளால் இணையதளத்தை அணுகுவதில் சிரமம் ஏற்படலாம். இந்த எளிய வழிமுறைகள் அத்தகைய சிக்கல்களைத் தீர்க்க பெரும்பாலும் உதவும்," என்று X-ல் வருமான வரித் துறை ஒரு பதிவை வெளியிட்டிருந்தது.
எனினும், பல பயனர்கள் அந்த வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும் சிக்கல்கள் தொடர்ந்ததாகப் புகார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.