cibil score 
வணிகம்

சிபில் ஸ்கோர் அவசியம் இல்லை...! யாருக்கு? -ஆர்.பி.ஜ. விளக்கம்..

வங்கிககள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் பெறும் நபர்களின் விவரங்கள்...

மாலை முரசு செய்தி குழு

முதல் முறையாக கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் அவசியம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளில் இருந்து தனி நபர் கடன், நகைக் கடன், வீடு உள்ளிட்ட பிற கடன்களை பெற, சிபில் ஸ்கோர் எனப்படும் 3 இலக்க எண்கள் அவசியமாகிறது.

சிபில் ஸ்கோர் என்பது என்ன?

வங்கிககள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் பெறும் நபர்களின் விவரங்கள், மற்றும் தகவல்களை திரட்டும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கி உரிமம் வழங்கிய நிறுவனங்களில் ஒன்றுதான் இந்த சிபில் (CIBIL).

சிபில் என்பது, (Credit Information Bureau of India Limited) என்பதன் சுருக்கமாகும்.

இந்த சிபில் நிறுவனம், தனி நபர் குறித்த கடன் தகவல்களை திரட்டி, அவற்றுக்கு உரிய மதிப்பெண் வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த சிபில் நிறுவனம், தனி நபர் கடன் குறித்து வழங்கும் மதிப்பெண், வங்கிகள் மூலம் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது .

சிபில் ஸ்கோர் எப்படி கணக்கிடப்படுகிறது?

இந்த நிறுவனம் கடன் பெறும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 3 இலக்கங்களை கொண்ட எண்களை வழங்குகிறது.

நாம் பெறும் கடனுக்காக திருப்பி செலுத்தப்படும் தவணைத் தொகையை முறையாக செலுத்துவது குறித்து இந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது.

அதில், 300 முதல் 900 வரை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இந்த மதிப்பெண்களைக் கொண்டே ஒரு நபர், எந்த அளவிற்கு கடன் பெற தகுதியானவர் என்று கணிக்கப்படுகிறது.

கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தில் இந்த சிபில் ஸ்கோர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்த ஸ்கோர் 700-ஆக இருந்தால், கடன் கொடுக்கலாம் என்று வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்துகிறது சிபில் நிறுவனம் .

ஆனால் கடன் கொடுப்பதும், மறுப்பதும் வங்கியின் முடிவையே சாரும். அதனை, சிபில் ஸ்கோர் எந்த வகையிலும் தீர்மானிக்காது.

சிபில் ஸ்கோர் - பலன்கள் என்ன

சிபில் ஸ்கோர் எண்ணிகை அதிக அளவில் இருந்தால் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன்,  நல்ல ஸ்கோர் இருந்தால், கடன் வழங்குபவர்கள், உங்களை நம்பிக்கையானவர்கள் என்று கருதி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க வாய்ப்புள்ளது.

அதிக ஸ்கோர் இருந்தால், குறைந்த வட்டி விதிகத்தில் கடன் பெறலாம்.

சிபில் ஸ்கோரை பெறுவது எப்படி

வங்கிகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நீங்கள் பெறும் கடனுக்கான தவணைத் தொகையை தாமதம் இன்றி, முறையாக, குறித்த நேரத்தில் செலுத்துவதன் மூலம் நல்ல ஸ்கோரை பெறமுடியும்.

சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்வது எப்படி

www.cibil.com என்ற CIBIL இணையதளம் மூலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிபில் ஸ்கோர் பூஜ்ஜியமாக இருந்தால்...

முதல்முறையாக கடன் பெறுபவரின் சிபில் ஸ்கோர் பூஜ்ஜியமாக இருக்கலாம்.

இதனை காரணம் காட்டி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், கடன் பெறுவோருக்கு மறுக்க கூடாது என்பதுதான் மத்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய  அறிவிப்பு.

எனவே முதல் முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரம், கடன் பெறுபவரின் பின்னணி மற்றும், கடனை திரும்ப செலுத்துவதற்கான ஆதாரம் ஆகியவற்றை வங்கிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது, மத்திய நிதித்துறை அமைச்சகம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.