UPI Transaction Charges 
வணிகம்

“QR Code-ல் பணம் செலுத்த இனி கட்டணமா?” - ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனை.. யார் செலுத்த வேண்டும் முழு விவரம்!

தனிநபர் அதாவது நுகர்வோர் இடையேயான பணப்பரிவர்த்தனை மற்றொன்று வணிகர் இடையேயான பணப்பரிவர்த்தனை...

மாலை முரசு செய்தி குழு

2 ஆயிரம் ரூபாய்க்கு, மேல் வணிக ரீதியிலான ‘யுபிஐ’ பணப் பரிவர்த்தனைக்கு இனி 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று National Payments Corporation of India அதாவது இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் சாதக பாதகங்களை தற்போது பார்க்கலாம். உழைக்கும் பணத்தை பாக்கெட்டில் வைத்து நேரடியாக செலவு செய்த காலம் போய், பணத்தை கண்ணிலேயே பார்க்காமல், வெறும் Digital Money-யாகவே மாறிப்போயுள்ளது இந்த கால சூழல்.

இப்போதெல்லாம் கை நிறைய பணத்தை பார்ப்பதெல்லாம் மறைந்தே விட்டது. அதற்கு காரணம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைதான். பெரிய பெரிய ஷாப்பிங் மாலில் மட்டுமே இருந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இன்று, வேர்க்கடலை, சுண்டல் விற்பனை செய்யும் தள்ளுவண்டிக் கடைகள் வரை எங்கும் வியாபித்துள்ளது.

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் :

ஆனால், இந்த யுபிஐ வழியாக பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் பூஜ்ஜியம் புள்ளி 4 சதவீதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டண நடைமுறை வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

யார் கட்டணம் செலுத்த வேண்டும் :

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தனி நபர்களுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, எவ்விதக் கட்டணமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணங்கள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விவரம் :

2 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு பூஜ்ஜியம் புள்ளி 4 சதவீதக் கட்டணம் என்ற பெயரளவு கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக இந்த UPI பணப்பரிவர்த்தனையை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, தனிநபர் அதாவது நுகர்வோர் இடையேயான பணப்பரிவர்த்தனை மற்றொன்று வணிகர் இடையேயான பணப்பரிவர்த்தனை.

நுகர்வோர் இடையேயான பணப்பரிவர்த்தனை :

இதில் நுகர்வோர் இடையேயான பணப்பரிவர்த்தனை என்பது பொதுமக்கள் தங்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அல்லது பொருட்கள் வாங்கிவிட்டு கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்துதல் மற்றும் தனிநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக UPI மூலம் பணம் அனுப்பும் போதும் எந்தவித கட்டணமும் விதிக்கப்படுவதில்லை.

வணிகர் இடையேயான பணப்பரிவர்த்தனை :

அப்படியானால் இந்த கட்டணம் யாருக்கு பொருந்தும் என்றால், வணிகர்களுக்கு மற்றும் குறிப்பிட்ட சில PPI எனப்படும் Prepaid Payment Instruments பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தும்போது, அதில் 2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் மீது திணிக்க கூடாது :

அவ்வாறு செலுத்த வேண்டிய கட்டணத்தை கடைக்காரர்தான் ஏற்க வேண்டுமே தவிர, வாடிக்கையாளர் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

கட்டண உச்சவரம்பு :

75 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு, தலா 300 ரூபாய் என உச்சவரம்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகளுக்கு கட்டணம் குறைப்பு :

ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், விவசாய இடுபொருட்கள் போன்ற அத்தியாவசியமான துறைகளில் மேற்கொள்ளப்படும் 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா 5 ரூபாய் என்ற நிலையான கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு வணிகர்களுக்கு விலக்கு :

இதிலும் சிறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறிய பெட்டிக்கடைகள், காய்கறி வியாபாரிகள் போன்றோரின் மாதாந்திர யுபிஐ வரவு குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்தை வணிகர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் வாடிக்கையாளர்களிடம் இந்த கட்டணத்தை திணிக்கக்கூடாது என்றும் இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த கட்டண செலவை வணிகர்கள், பொருட்கள் மீதோ அல்லது Card payment என்ற பெயரிலோ பொதுமக்களிடம்தான் வசூலிப்பார்கள் என்பதும், இந்த சுமையும் பொதுக்கள் தலையில்தான் விழும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் இதுவும் விலைவாசி உயர்வுக்கே வழிவகுக்கும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் கருத்தாகவும் உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.