கேரளாவில் பருவமழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த இயற்கைப் பேரிடரின் நடுவே, தன் உயிரைத் துச்சமென மதித்து, வெள்ளத்தில் சிக்கிய ஒரு விவசாயியைக் காப்பாற்றத் தன் 'லைஃப் ஜாக்கெட்டை'க் (Life Jacket) கழற்றிக் கொடுத்துவிட்டு, பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார் 36 வயதான நீச்சல் மற்றும் ராப்பெல்லிங் (Rappelling) பயிற்சி வல்லுநரான ஆர்.ராஜேஷ். நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவம் கேரளாவையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
திருவனந்தபுரத்தின் கல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கண்ணூர் மாவட்டம் மீன்சுள்ளி (Meenthulli) நீர்வீழ்ச்சிப் பகுதியில் கயிறு ஏறும் பயிற்சியாளராகப் (Rappelling Instructor) பணிபுரிந்து வந்தார். 2018 வெள்ளப்பெருக்கு மற்றும் 2024 நிலசரிவின்போதும் மீட்பு படையில் இணைந்து பணி செய்துள்ளார் ராஜேஷ்.
இவருக்கு பெற்றோரும், ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் கண்ணூர் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதற்கிடையே, மலையின் மேல் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்த 61 வயது விவசாயியான பென்னி என்பவர், ஞாயிற்றுக்கிழமையன்று தனது காபி தோட்டத்தைப் பார்வையிடச் சென்றிருக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் பெருவெள்ளம் சூழ்ந்துகொள்ள, பென்னி கண்ணூர் பகுதியிலுள்ள மீன்சுள்ளி தீவுப்பகுதியில் தவிக்க நேரிட்டது.
தீவுப் பகுதியில் ஒரு நபர் சிக்கியிருக்கும் தகவல் உள்ளூர் மீட்புப் படையினருக்குக் கிடைத்தது. சற்றும் தாமதிக்காமல், சக மீட்புக் குழுவினரான ஷிபின் மற்றும் ஜிதின் ஆகியோருடன் இணைந்து கரியங்கோடு (Kariangode) ஆற்றை நீந்திக் கடந்து பென்னியை மீட்க சென்றுள்ளார் ராஜேஷ்.
பாதுகாப்புக் கயிறு ஒன்றின் உதவியோடு பென்னியைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு திரும்புகையில், பென்னி வெள்ளத்தில் நீந்த முடியாமல் தத்தளிப்பதைக் கவனித்துள்ளார் ராஜேஷ்.
உடனடியாக, தான் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டைக் கழற்றிப் பென்னிக்குப் அணிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயி பென்னியின் உயிர் பாதுகாக்கப்பட்டது. ஆனால், கரையை நெருங்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ராஜேஷின் கைகள் கயிற்றிலிருந்து நழுவ, ஆற்றின் பயங்கர நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். மூன்று நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 4) ராஜேஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ராஜேஷ் ஒரு சிறந்த நீச்சல் வீரர் மட்டுமல்ல; சாகச பேரிடர் மேலாண்மைச் சங்கத்தின் (Adventure Disaster Society) முக்கிய உறுப்பினரும் ஆவார். கயிறு மூலம் மீட்கும் தொழில்நுட்பம் (Rope rescue) மற்றும் நீர்நிலை பாதுகாப்பு குறித்துப் பலருக்கும் பயிற்சி அளித்தவர்.
2018-ல் கேரளாவை உலுக்கிய பெருவெள்ளம், 2024 வயநாடு நிலச்சரிவு எனப் பல பேரிடர்களில் தனது உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேஷின் இந்தத் தியாகத்திற்குத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் வி.டி.சதீசன், "இது நெஞ்சை உருக்கும் சம்பவம். முந்தைய பேரிடர்களிலும் முன்கள வீரராகச் செயல்பட்ட அர்ப்பணிப்புமிக்க தன்னார்வலர் ராஜேஷ். மூழ்கிக்கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்ற, தன் லைஃப் ஜாக்கெட்டைக் கொடுத்துவிட்டு அவர் வெள்ளத்தில் பலியாகியுள்ளார். மனித குலத்தின் மீதான அவரது தன்னலமற்ற அன்பும், இந்த உயரிய தியாகமும் என்றென்றும் நினைவுகூரப்படும்" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேரில் அவரது உடலுக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கேரளாவில் பருவமழையின் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மழை தொடர்பான பேரிடர்களில் இதுவரை மாநிலம் முழுவதும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; 4 பேரைக் காணவில்லை.
300-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 12,000-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகப் பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில்தான் மக்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சுமார் 165 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நாசமாகியுள்ளன. இதனால் 3,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முதற்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கண்ணூர், வயநாடு, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.
ராஜேஷ் உயிரிழந்த கண்ணூர் மாவட்டத்தின் செறுபுழா (Cherupuzha) பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலகட்டத்தில் அங்கு 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள், பாலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன.
சில பகுதிகளில் மழை குறைந்து, வெள்ளம் வடிந்து வருவதால் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.