மற்றவை

சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டு இருந்த 4 பேர் உயிரிழப்பு...!

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டு இருந்த 4 பேர் உயிரிழந்தனர். 

Tamil Selvi Selvakumar

அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது கிராமத்தை சேர்ந்த ஜெய்னுபி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த ஜெய்னுபி, அவருடைய மகன் தாது, மருமகள் ஷர்பனா, பேரன் பெர்தோஸ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி  பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வீட்டில் இருந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.  

இந்த சம்பவத்தால் அருகில் உள்ள இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரை  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.