மற்றவை

அரசு அதிகாரிகள் 15 பேர்களின் வீடுகளில் அதிரடி சோதனை... குழாய்களில் இருந்து லட்ச கணக்கில் கொட்டிய பணம்...

கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது, பிளாஸ்டிக் குழாய்களில் இருந்து லட்சக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...  

Malaimurasu Seithigal TV

கர்நாடகா மாநிலத்தில் அரசு உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் லஞ்சத்தில் திளைப்பதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்திருப்பதாகவும் அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச அதிகாரிகளை ரகசியமாக கண்காணித்து வந்த ஊழல் தடுப்பு படையினர், 15 அதிகாரிகளை குறிவைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கதக் மாவட்டத்தில் விவசாயத்துறை இணை ஆணையர் ருத்ரேஷ் அப்பார் வீட்டில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ தங்கம், 15 லட்சம் ரூபாய் ரொக்க பணம், மற்றும் 100 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக ஊழல் தடுப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொட்புலாப்பூர் வருவாய்த்துறை ஆய்வாளர் லட்சுமி நரசிம்மா வீட்டில் இருந்து சுமார் 5 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

15 அதிகாரிகளின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் மற்றும் பொருட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின் மதிப்பையும் ஆய்வு செய்து வருவதாகவும் ஊழல் தடுப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் கர்நாடகா அரசு அதிகாரிகள் 15 பேர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனை அம்மாநில அரசு ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.