கரூரிலிருந்து கோவை சென்ற அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை பொதுமக்கள் பிடித்து பத்திரமாக போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை நோக்கி வந்த அரசு பேருந்தில் காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த 57 வயதான ஞானசேகர், கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவி செல்போனில் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மாணவியின் பேருந்து நிறுத்தம் வந்தபோது அங்கு காத்திருந்த அவரது நண்பர்கள் பேருந்தை வழிமறைத்தனர்.
மேலும் படிக்க | திராவிட மாடல்: வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் நடந்து கொள்கிறது - முன்னாள் அமைச்சர் காட்டம் !!!!
அப்போது நடத்துனரிடம் நடந்தவற்றை கல்லூரி மாணவியின் நண்பர்கள் கேட்டதாக தெரிகிறது. அதற்கு நடத்துனர் ஞானசேகர் ஒத்துழைக்காததால் அங்கிருந்த சக பயணிகள் உதவியுடன் அவரைப் பிடித்து சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கல்லூரி மாணவி இடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நடத்துனரிடம் மேற்கொண்ட விசாரணையில் கல்லூரி மாணவியை நடத்துனர் ஞானசேகர் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. தகவலின் பேரில் சூலூர் காவல் நிலையத்துக்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்துனர் ஞானசேகர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அரசு பேருந்தில் நடத்துனர் ஒருவர் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.