மற்றவை

கேரளாவுக்குச் செல்கிறார் மோடி…பயணத்தின் நோக்கம் என்ன?

Malaimurasu Seithigal TV

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கேரளாவில் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த ஊரான காலடி கிராமம் உள்ளது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி  செப்டம்பர் 1 அன்று கேரளா வருகிறார். மாலை 6 மணிக்கு கேரளா வரும் அவர், காலடி கிராமத்திற்கு செல்கிறார்.

அங்கு ஆதிசங்கரர் ஜென்மபூமியில் தரிசனம் செய்கிறார். அதன்பின்பு நாளை மறுநாள் 2-ந் தேதி கொச்சி துறைமுகத்திற்கு செல்கிறார். அங்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புதிய கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுவதன் மூலம் இந்தியாவில் 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இந்திய கடல்சார் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான புதிய கடற்படை கொடியையும் அறிமுகம் செய்கிறார். அதன்பிறகு பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலம் மங்களூருவுக்கு செல்கிறார். அங்கு ரூ.3,800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.