தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வது மட்டுமே இனி அதிக சம்பளம் பெறுவதற்கான உத்தரவாதமாக இருக்காது போலிருக்கிறது. பணியாளர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் மற்றும் சலுகைகளை மாற்றியமைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, அதன் கிளவுட் சேவையான Azure பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புதிய ஊதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் பங்குகள் வழங்கப்படுவதுடன், எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாதவர்கள் மேலாளர்களின் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
இந்த மாற்றம் குறித்து Azure பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் அருண் உலாகரட்சகன் (Arun Ulagaratchagan) நிறுவன ஊழியர்களுக்கு உள்நாட்டு தகவல் குறிப்பை அனுப்பியுள்ளார். அதில், பணியாளர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதும், எதிர்பார்த்த செயல்திறன் இல்லாதபோது அதனை நேர்மையாகச் சுட்டிக்காட்டுவதும் சமமாக முக்கியம் என்று தெரிவித்துள்ளார். அதாவது, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கும் ஊழியர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். குறிப்பாக, உயர்ந்த செயல்திறன் மதிப்பீட்டைப் பெறுபவர்களுக்கு கூடுதல் நிறுவனப் பங்குகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஊழியர்களை ஊக்குவிப்பது நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
பணியில் எதிர்பார்த்த முடிவுகளை வழங்காத ஊழியர்கள் இனி கூடுதல் கவனத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுடன் மேலாளர்கள் நேரடியாக அமர்ந்து செயல்திறன் குறித்துப் பேசுவார்கள். எந்த இடத்தில் முன்னேற்றம் தேவை, நிறுவனத்தின் எதிர்பார்ப்பு என்ன, அடுத்தகட்டமாக எவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். ஊழியர்களுக்கான இலக்குகள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், அவர்களின் பணிகள் குறித்த கருத்துகள் தாமதமின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மாற்றத்திற்குப் பின்னால் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிகரித்து வரும் போட்டியும் முக்கியக் காரணமாக உள்ளது. தற்போது உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் AI தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றன. இதற்குத் தேவையான கணினி கட்டமைப்பு, தரவு மையங்கள் மற்றும் கிளவுட் சேவைகளில் Azure முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் இந்தப் பிரிவின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் வேலை செய்யும் முறையையே மாற்றி வருவதாகவும், போட்டி முன்பைவிட அதிகரித்துள்ளதாகவும் அருண் தனது தகவல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பணித்தரத்தை எட்டுவதற்கு ஏற்கெனவே உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதுடன், பணியின் முடிவுகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தையும் மைக்ரோசாப்ட் முன்வைத்திருந்தது. உலகம் முழுவதும் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 2.23 லட்சம் ஊழியர்களில் தகுதியுள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பிட்ட பணிநிலைகளில் உள்ள ஊழியர்களும் இதில் இடம்பெற்றனர்.
மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவும் AI தொழில்நுட்பத்தால் வேலை செய்யும் முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார். எதிர்காலத்தில் நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியரும் AI முகவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிறுவனத்தின் புதிய ஊதிய நடைமுறை வெறும் சம்பள மாற்றமாக மட்டும் பார்க்கப்படவில்லை. AI காலத்திற்கு ஏற்ப பணியாளர்களின் திறன், உற்பத்தித்திறன் மற்றும் பங்களிப்பை மறுமதிப்பீடு செய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களில் இனி அனுபவத்தைவிட பணியின் முடிவுகளுக்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறனுக்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இந்த மாற்றம் அமைந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.