தொழில்நுட்பம்

கேன்சர் நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி! உடலுக்குள் சென்று புற்றுநோய் செல்களை அழிக்கும் 'குட்டி ரோபோக்கள்' தயார்!

டாக்டர் அம்பரிஷ் கோஷ் மற்றும் அவரது குழுவினர் இந்த காந்த சக்தி கொண்ட நானோ ரோபோக்களை வடிவமைத்துள்ளனர்...

மாலை முரசு செய்தி குழு

புற்றுநோய் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது மரண பயமும், அந்த நோய்க்கான சிகிச்சையின் போது ஏற்படும் தாங்க முடியாத வேதனையும் தான். கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் புற்றுநோய் செல்களை அழித்தாலும், அவை உடலின் ஆரோக்கியமான செல்களையும் பாதித்து முடி உதிர்தல், உடல் சோர்வு போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், இந்த நிலையை மாற்றி மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் அம்பரிஷ் கோஷ். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) பேராசிரியராகப் பணியாற்றும் இவர், கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய 'நானோ ரோபோக்களை' (Nanobots) உருவாக்கியுள்ளார். இந்த ரோபோக்கள் உடலுக்குள் சென்று துல்லியமாகப் புற்றுநோய் செல்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் வல்லமை கொண்டவை என்பது மருத்துவ உலகில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய புற்றுநோய் சிகிச்சைகளில் உள்ள மிகப்பெரிய சவாலே மருந்துகளைக் கட்டிகளுக்குள் (Tumours) ஆழமாகச் செலுத்துவதுதான். பெரும்பாலும் மருந்துகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் சென்று விடுவதால் ஆரோக்கியமான திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இந்தச் சவாலை முறியடிக்கவே டாக்டர் அம்பரிஷ் கோஷ் மற்றும் அவரது குழுவினர் இந்த காந்த சக்தி கொண்ட நானோ ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். இவை மனித இரத்த நாளங்கள் வழியாகவும், அடர்த்தியான திசுக்கள் வழியாகவும் நீந்திச் சென்று நோய பாதித்த இடத்தை அடையக்கூடியவை. பாக்டீரியாக்கள் எப்படி நகருமோ, அதே போன்ற அசைவுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இந்த நானோ ரோபோக்களின் வடிவமைப்பு மிகவும் நுட்பமானது. இவை திருகு வடிவத்திலான (Helix-shaped) ஒரு சிறிய வாலைக் கொண்டுள்ளன. ஒரு படகு எப்படித் தண்ணீரில் முன்னோக்கிச் செல்ல விசிறியைப் பயன்படுத்துகிறதோ, அதேபோல இந்த ரோபோக்கள் தங்கள் வாலைச் சுழற்றி உடலுக்குள் பயணிக்கின்றன. இந்த ரோபோக்களின் உடல் பகுதி சிலிக்காவால் (Silica) ஆனது. இது மனித உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத ஒரு பொருளாகும். இதன் நுனியில் இரும்பு போன்ற காந்தப் பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்திலிருந்து காந்த அலைகளைச் செலுத்துவதன் மூலம் மருத்துவர்களால் இந்த ரோபோக்களைத் துல்லியமாக இயக்கி, புற்றுநோய் பாதித்த பகுதிக்குக் கொண்டு செல்ல முடியும்.

இந்த ரோபோக்கள் ஒரு 'டெலிவரி டிரக்' போலச் செயல்படுகின்றன. அதாவது, இவற்றின் மேற்பரப்பிலோ அல்லது நுனியிலோ புற்றுநோய்க்கான மருந்துகளைத் தடவி உடலுக்குள் அனுப்பலாம். இவை நேரடியாகக் கட்டிகளைச் சென்றடைந்ததும், மருந்துகளை அங்கே மட்டும் வெளியிடும். இதனால் உடலின் மற்ற பாகங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமின்றி, 'ஹைபர்தெர்மியா' (Hypothermia) என்ற முறையிலும் இவை செயல்படுகின்றன. அதாவது, காந்த அலைகள் மூலம் இந்த ரோபோக்களைச் சூடாக்கி, சுமார் 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை உருவாக்கி, புற்றுநோய் செல்களை எரித்து அழிக்கவும் முடியும். இது ஆரோக்கியமான திசுக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் நோயை அழிக்கும் ஒரு நவீன முறையாகும்.

இந்த ரோபோக்களின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இவை எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் செய்யும் போது தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிரும் திறன் கொண்டவை. இதனால் மருத்துவர்கள் இந்த ரோபோக்கள் உடலில் எங்கே உள்ளன என்பதைக் கண்காணித்து, மிகத் துல்லியமாகக் கட்டிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியும். ஆழமான மார்பகத் திசுக்களில் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்களைக் கூடக் கண்டறிந்து அழிப்பதில் இந்த ரோபோக்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் செல்களுக்கு எதிராக இவை சிறப்பாகச் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சை மட்டுமல்லாமல், பல் மருத்துவத்திலும் இந்த ரோபோக்கள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளன. பற்களில் செய்யப்படும் வேர் சிகிச்சை (Root Canal Treatment) பலருக்கும் மிகுந்த வலியைத் தரும் ஒன்றாகும். பல்லின் வேர்களில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பது மிகவும் கடினம். ஆனால், இந்த நானோ ரோபோக்கள் பல்லின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று பாக்டீரியாக்களை அழிப்பதோடு, பற்களை மீண்டும் வலுப்படுத்தவும் உதவுகின்றன. விலங்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இது 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தத் தொழில்நுட்பம் விலங்குகள் மற்றும் செல் வளர்ப்பு சோதனைகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்டமாக மனிதர்களிடம் மருத்துவப் பரிசோதனைகள் (Clinical Trials) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் டாக்டர் அம்பரிஷ் கோஷ் ஈடுபட்டுள்ளார். இதற்காகத் தனியாக ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் அவர் தொடங்கவுள்ளார். இந்த முயற்சிக்கு அங்கீகாரமாக 2025-ம் ஆண்டிற்கான நியூயார்க் அகாடமி ஆஃப் சயின்சஸ் மற்றும் டாடா சன்ஸ் வழங்கும் 'டிரான்ஸ்ஃபர்மேஷன் பரிசு' (Transformation Prize) அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நானோ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, புற்றுநோய் சிகிச்சை என்பது அதிக வலியோ, பக்க விளைவுகளோ இல்லாத ஒரு எளிய சிகிச்சையாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.