தொழில்நுட்பம்

சாட் ஜிபிடி கொடுத்த தற்கொலை ஐடியா.. சூரத் கோவிலில் இரண்டு மாணவிகள் விபரீத முடிவு - எலான் மஸ்க் என்ன சொன்னார் தெரியுமா?

இந்தச் சம்பவம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் இந்தச் சம்பவம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது...

மாலை முரசு செய்தி குழு

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் கழிவறையில், இரண்டு கல்லூரி மாணவிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள 'சாட் ஜிபிடி' (ChatGPT) எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், தனது எக்ஸ் தளத்தில் "யைக்ஸ்" (Yikes) என்று பதிவிட்டு தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை கல்லூரிக்குச் சென்ற 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு தோழிகள் மாலை வரை வீடு திரும்பவில்லை. பதற்றமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மாணவிகளின் செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அவர்களது சிக்னல் சூரத் நகரில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயண் கோவிலைக் காட்டியது. அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார், கோவிலுக்கு வெளியே மாணவிகளின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். உடனே கோவில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்கள் கழிவறைக்குள் செல்வது பதிவாகியிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு போலீஸாரே அதிர்ந்து போயினர்.

சம்பவம் நடந்த இடத்தில் மயக்க மருந்து பாட்டில்களும், ஊசிகளும் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து சூரத் நகர உதவி ஆணையர் என்.பி. கோகில் கூறுகையில், "உயிரிழந்த இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள். ஒருவர் முதலாம் ஆண்டு வணிகவியல் மாணவி, மற்றொருவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் அதிகப்படியான மயக்க மருந்தை ஊசி மூலம் உடலில் ஏற்றிக்கொண்டது தெரியவந்துள்ளது. இவர்களது செல்போனைத் திறந்து பார்த்தபோது, தற்கொலை செய்துகொள்ள என்னென்ன மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்று சாட் ஜிபிடி-யை வைத்து மணிக்கணக்கில் அவர்கள் தேடியது உறுதியானது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், அந்த மாணவிகளின் செல்போன் கேலரியில், ஏற்கனவே ஒரு பெண் மயக்க மருந்து ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டும் இருந்துள்ளது. எதற்காக இந்த இளம் பெண்கள் இத்தகைய விபரீத முடிவை எடுத்தார்கள் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கும், தடயவியல் சோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், ஏற்கனவே சாட் ஜிபிடி நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI) உடன் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். லாப நோக்கற்ற ஒரு தொழில்நுட்பத்தை லாபத்திற்காக மாற்றியதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, "க்ரோக் (Grok - எலான் மஸ்க்கின் ஏஐ) காரணமாக யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை, ஆனால் சாட் ஜிபிடி மூலம் இது நடந்திருக்கிறது" என்று சாடியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்