இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணக் கோரியும், கோத்தபய ராஜபக்சே அரசாங்கத்திற்கு எதிராகவும், பேரணியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில், காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, போராட்டக்கார்களை கலைக்க முற்படுவதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலேயே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.