வைரல்

கரும்புக்கு அடிமையானவன்.... வண்டியை வழிமறித்து சுவைத்தான்..!

Tamil Selvi Selvakumar

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் கரும்பு லாரியை காட்டு யானை ஒன்று வழி மறித்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உணவுக்காக சாலையை கடக்கும் விலங்குகள்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது உணவு, தண்ணீருக்காக சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

லாரியை வழி மறித்த யானைகள்:

இந்நிலையில், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே, தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரிகளை, யானை ஒன்று வழி மறித்தது. பின்னர் லாரியில் இருந்த கரும்பு கட்டுகளை இழுத்த அந்த யானை, ரசித்து ருசித்து தின்றபடி நின்றது.

போக்குவரத்து பாதிப்பு:

சாலையை மறித்து நின்று கரும்பு துண்டுகளை யானை சுவைத்துக் கொண்டிருந்ததால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நின்றன. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரும்புகளுக்கு அடிமையாகி கரும்பு கட்டுகளை யானை தூக்கி சாப்பிடும் அழகை வாகன ஓட்டிகள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.