வைரல்

மனிதம் இறந்து விட்டதா? சிசிடிவி வீடியோவால் கொந்தளித்த பொதுமக்கள்!!!

குடியிருப்பின் லிஃப்டில் வந்து கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்தது. அதனை கவனித்தும் மதிக்காமல் நின்ற நாயின் சொந்தகாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஒரு பழமொழி உண்டு, பாம்புக்கு, பல்லில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், ஆனால், மனிதனுக்கு தான் உடம்பெல்லாம் விஷம் என்று. அதனை ஒவ்வொரு முறையும் மனிதர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். அதிலும், மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதனைக் காப்பது தான் இருப்பதிலேயே கடினமான வேலையாக இருக்கிறது.

அந்த விதத்தில் தான் சமீபத்தில் ஒரு வீடியோ படு வைரலாகியது. இது பெரும் சர்ச்சை கிளம்பியதை அடுத்து, இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

உத்திரபிரதேசத்தின் காசியாபாதில், ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் (extension) சார்ம்ஸ் கேஸ்டல் (Charms Castle society) எனும் ஒரு பெரிய குடியிருப்பு இருக்கிறது. அதில் வசித்து வரும் பெண், ஒரு நாய் வளர்த்து வருகிறார். லிஃப்ட் மூலமாக, தனது தளத்திற்கு செல்லும் போது, அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு சிறுவன், லிஃப்டில் அவர்களுடன் பயணித்திருக்கிறார்.

அந்த பெண்ணுடன் வந்த நாய், முதலில் இருந்தே குரைத்துக் கொண்டே, கோபமாக இருந்த நிலையில், அந்த சிறுவன் சிறிது பதறி இருக்கிறார். பின், பாதியிலேயே இறங்க முயன்ற போது, அந்த நாய் அந்த சிறுவனை துரத்தி, தொடையில் கடித்துள்ளது.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால் பயந்தும், வலியில் அழுதும் கொண்டிருந்த அந்த சிறுவனைக் கண்டும் காணாதது போல, எதார்த்தமாகவே இருந்திருக்கிறார் அந்த பெண். ஆனால், அந்த சிறுவனோ, துடித்து, காயமடைந்த பகுதியை தேய்த்துக் கொண்டே அழுதிருக்கிறார்.

பின், ஏதும் நடக்காதது போல, அந்த பெண், நாயுடன் தனது தளத்தில் இறங்கிய பின், அடுத்த தளத்தில், மற்றொரு சக குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஏறினார். அப்போது அந்த சிறுவன் நடந்ததைக் கூறியது அடுத்து, லிஃப்டில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தனர் சிறுவனின் பெற்றோர். அதில், அந்த பெண், கவலையில்லாமல், எதார்த்தமாக நின்ற கவலைக்குறிய காட்சி, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் தான், அதே உத்திர பிரதேசத்தில், லக்னோ பகுதியில், பிட்புல் என்ற ராட்சத நாய் தாக்கி, 82 வயது மூதாட்டி இறந்திருக்கிறார். இந்நிலையில், மீண்டும் நடந்த இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனிதநேயமற்ற அந்த நாயின் சொந்தகாரரின் செயலால், நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.