வைரல்

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி...! காவேரி மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு....!

Malaimurasu Seithigal TV

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் ஏழாவது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே, அவரைப் பார்க்க மருத்துவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரின் அறைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதோடு,  மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே காவல் ஆய்வாளர் உட்பட மொத்தம் 10 வரை போலீசார் பணியில் உள்ளனர்.

நேற்று இரவு மருத்துவமனை சுற்றி பணியில் இருந்த 50 காவல் துறையினர் ஷிஃப்ட் மாற்றப்பட்டு,  கூடுதலாக காவல் துறையினர் வந்துள்ளனர். 30 ஆயுத படையினர் உட்பட 80 காவல் துறையினர் மருத்துவமனையை  சுற்றி காவல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 100 -க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காவேரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அதைத்தொடர்ந்து, இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரத்த பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் தொடர்ந்து அவருக்கான சிகிச்சை முறைகளை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.