ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன், அறிக்கையின்படி இந்தியாவின் 31 முதலமைச்சர்களின் மொத்த
மதிப்பு ஆயிரத்து 630 கோடி ரூபாய் ஆகும்.அதில், அதிகபட்சமாக 931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்தபடியாக அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு 332 கோடி சொத்து மதிப்புடன் 2ம் இடத்தில் உள்ளார்.கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 51 கோடி சொத்து மதிப்புடன் 3 இடத்தில் உள்ளார். இவர்கள்தான் இந்தியாவின் முதல் மூன்று பணக்கார முதலமைச்சர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 38 கோடி சொத்து மதிப்புடன் 6வது இடத்தை பிடித்துள்ளார்.15 லட்சம் சொத்து மதிப்புடன் இந்தியாவின் ஏழ்மை முதலமைச்சராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளார்.
அவருக்கு அடுத்தப்படியாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா 55 லட்சத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 1 கோடி சொத்துக்களுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 3வது இடத்தில் உள்ளார்.தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிக கிரிமினல் வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் மீது 89 கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும், அதில், 72க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனைக்குறிய குற்ற வழக்குகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளன. இதில் 11 வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய வழக்குகள் என ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.