பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 1948 டிசம்பர் 21-ம் தேதியன்று ஈரோட்டில் சம்பத் - சுலோச்சனா தம்பதியரின் மகனாக பிறந்தநார் இளங்கோவன்.
ஈரோடு வெங்கடசாமி ராமசாமியாக இருந்தவர் பெரியார் என தமிழ் மக்களால் போற்றப்பட்டார். அன்னாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் என்ற அடையாளத்துடன் திகழ்ந்தவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
ஈ.வெ.கி சம்பத் 1957-ல் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
பின்னர் 1977 தந்தையின் நண்பரும், நடிகருமான சிவாஜி கணேசனுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் பயணத்தை தொடங்கினார். 1984-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழகத்தின் அப்போதை முதலமைச்சருமான எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது, அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாவதற்கு காரணமாக இருந்தார் இளங்கோவன்.
1984-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சிவாஜி அணி ஆதரவாளராக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட இளங்கோவன், முதல் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
பின்னர் 1989-ம் ஆண்டு பவானி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர், அதற்கு பிறகு மக்களவைத் தேர்தலில் போட்டியிடவே முடிவெடுத்தார்.
1996-ல் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தோல்வியை தழுவிய இளங்கோவன், 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக எம்.பி.யானார்.
இதைத் தொடர்ந்து 2009-ல் ஈரோடு, 2014-ல் திருப்பூர் மற்றும் 2019-ல் தேனி மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அசாத்திய துணிச்சலுடன் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்த இளங்கோவன், இதுவரை 2 முறை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மகன் திருமகன் ஈவெரா தேர்தலில் வளர்ந்து வந்த நிலையில், பதவி எதையுமே விரும்பாதிருந்தார்.
இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பிராக இருந்தபோது உடல்நலக்குறைவால் மறைந்தார். அப்போது மகனின் தொகுதியில் தந்தை இளங்கோவன் நின்றார். நீண்ட காலத்திற்கு பிறகு 2023-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கனியை தட்டினார்.
தமிழக அரசியலில் எந்தவொரு அச்சமும் இன்றி தன் கருத்துக்களை துணிச்சலுடன் தெரிவிப்பவர் என காங்கிரசார் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் தலைவர்களாலும் பாராட்டப்பட்டார். இந்நிலையில் சமீபநாட்களாக உடல்நலகுறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார்.