இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு...வாரணாசியில் 144 தடை உத்தரவு அமல்!

Tamil Selvi Selvakumar

பெரும் சர்ச்சையை கிளப்பிய ஞானவாபி மசூதி வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அம்மன் சிலையை வழிபட அனுமதி கோரி வழக்கு:

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள  காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும், அதை தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு:

இதையடுத்து ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை:

அதன்படி, இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் வாரணாசி நீதிமன்றம் விசாரித்து நிறைவு செய்துள்ளது. குறிப்பாக மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்றும், எனவே இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை’ என்றும் வாதிட்டுள்ளார்.

ஒத்திவைப்பு:

ஆனால் மனுதாரர் தரப்பிலோ, ‘கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது’ என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி  ஏ.கே.விஸ்வேஷ், வழக்கின் இறுதி தீர்ப்பை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தார். 

144 தடை உத்தரவு:

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாவதை ஒட்டி, காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் உள்பட வாரணாசி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.