இந்தியா

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் இன்று முதல் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு...

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் இன்று முதல் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

மராட்டியத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களையிழந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் நடைபெற்றது. 

இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக விநாயகா் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இதில் வீடுகளில் 2 அடி வரையிலும், பொது இடங்களில் 4 அடி வரையும் சிலையை வைக்க மாநகராட்சி அனுமதி வழங்கி இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் 3-வது கொரோனா அலை ஏற்பட்டு இருப்பதாக மேயர் கிஷோரி பெட்னேகா் அறிவித்தார். இதற்கிடையே மும்பை மாநகராட்சி மண்டல்கள் சார்பில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்ய தடைவிதித்து உள்ளது.

இதற்கிடையே விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில், இன்று முதல் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.