இந்தியா

17வது ஜி20 உச்சி மாநாட்டில்...உறுதியளித்த பிரதமர் மோடி!

Tamil Selvi Selvakumar

17வது ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பாலி சென்ற பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாக வரவேற்பு அளித்தார்.

ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியது:

இந்தோனேசியாவில், 17-வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்க பாலி நகர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் பிரான்சு பிரதமர் இம்மானுவேல் மாக்ரோன் ஆகியோரும் ஆரத்தழுவி பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்திய வம்சாவளியான இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் அவர் சந்தித்துப் பேசினார்.

மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது:

மாநாட்டின் முதல் நிகழ்வாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான அமர்வு தொடங்கியது. அப்போது உணவு, உரங்கள் மற்றும் ஆற்றலுக்கான விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவம் குறித்து  பிரதமர் மோடி அடிக்கோடிட்டி விளக்கினார். கொரோனாவுக்குப் பிந்தைய நாட்களில் உலகை சீரமைத்துக் கட்டமைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்முன் இருப்பதாக தெரிவித்த அவர், காந்தி மற்றும் புத்தர் பிறந்த புனித இந்திய பூமியில் ஜி20 மாநாடு நடந்தால், உலக அமைதிக்கான முக்கிய முன்னெடுப்பை எடுப்போம் எனவும் அவர் உறுதியளித்தார். 

உறுதியளித்த மோடி:

தொடர்ந்து, உரம், உணவு தானியங்களில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும், இந்தியாவில் நீடித்த உணவு பாதுகாப்புக்கு இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானிய பயன்பாடு ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது என்று தெரிவித்த அவர், தூய்மையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் கூறினார். அதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 2030ம் ஆண்டுக்குள் நாட்டில் 50 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். 8க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, ஜி20 உச்சி மாநாட்டில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, உணவி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற உலகளாவிய அக்கறையின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஜி20 தலைவர்களுடன் விரிவான விவாதம் நடத்துவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.