இந்தியா

“ஒரே நொடியில் பறிபோன 23 உயிர்கள்” - பேருந்து மீது மோதிய கண்டைனர்.. அசாமில் நடந்த கோர விபத்து!

"கல்லூரி மாணவர்கள் பயணித்த டிராவலர் வேன் மீது கண்டெய்னர் லாரி மோதியதில்.."

Muthu Lakshmi

அசாம் மாநிலம் காசிரங்கா அருகே உள்ள ரங்காஜனில் பயங்கர சாலை விபத்து. டிராவலர் வேன் மற்றும் கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்லூரி மாணவர்கள் பயணித்த டிராவலர் வேன் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற கசிரங்கா தேசியப் பூங்கா அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. போகாக்கட்டிலிருந்து நாகோன் நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் மினி பஸ் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விபத்துக்குள்ளான மினி வேண்டில் 35க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணித்தாக சொல்லப்படுகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடும் சேதத்திற்கு உள்ளான வாகனத்திற்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்புக் குழுவினர் போராடி மீட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக கோஹோரா மாதிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே, விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக கோலாகாட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்வப்நீல் தேகா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மினி பஸ்ஸில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கையும் இன்னும் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

கசிரங்கா தேசியப் பூங்கா அருகே வாகனங்கள் செல்ல வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி மினி பஸ் அதிவேகத்தில் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அப்போது ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் கோர விபத்து குறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், இந்தத் துயரமான நேரத்தில் ஒட்டுமொத்த அசாம் மக்களும் அவர்களுக்குத் துணையாக இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் எவ்விதத் தாமதமும் இன்றி சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்குவதே அரசின் உடனடி முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் அதுல் போரா சம்பவ இடத்திலேயே இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்த இந்த விபத்து அசாம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே விபத்தில் சிக்கியவர்களின் முழுமையான எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் இறுதி விவரங்களும் தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்