16 மாதங்களில் கொல்லப்பட்ட 60,000 தமிழர்கள்.. சியாம் - பர்மா `டெத் ரயில்வே' குரூரம்.. மறைக்கப்பட்ட வரலாறு! 
இந்தியா

16 மாதங்களில் கொல்லப்பட்ட 60,000 தமிழர்கள்.. சியாம் - பர்மா `டெத் ரயில்வே' குரூரம்.. மறைக்கப்பட்ட வரலாறு!

கடும் உழைப்பின் காரணமாக எலும்புக்கூடாக காட்சியளித்த போர்க்கைதிகள் நோயால் இறந்து போனால் ரயில்பாதை அருகேயே புதைக்கப்பட்டனர். அதில் ஒரு சிலுவை அமைத்து இறந்தவரின் பெயரை தொங்க விட்டனர். இப்படி ரயில் பாதை முழுவதும் இறந்து போனவர்களின் சமாதி இருந்தது.

Antony Ajay R

யாத்திசை படத்தின் இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சசிகுமார், சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் டெத் ரயில்வே. இந்த படத்தின் டீஸர் நேற்றையதினம் வெளியாகியிருக்கிறது.

இந்த படம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜப்பான் பர்மாவை ஆக்கிரமித்தபோது நடந்ததாக டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாயாம்-பர்மா ரயில்பாதையில் கொத்துகொத்தாக தமிழர்கள் மாண்டுபோன ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றின் மீது இந்த திரைப்படம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.

Death Railway Movie poster

சியாம் - பர்மா ஆபத்தான ரயில்பாதையை கட்டமைக்கத் திட்டம்

இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் மட்டுமில்லாமல் கிழக்கு ஆசியாவிலும் நடைபெற்றது. ஜெர்மனி, இத்தாலி போன்ற அச்சு நாடுகளின் கூட்டணியில் இருந்த ஜப்பான், பர்மாவைக் கைப்பற்றியது (இன்றைய மியான்மர்). இந்தியாவை நோக்கி முன்னேற திட்டமிட்டது.

ஆனால் ராணுவ வீரர்களுக்குத் தேவையான உணவு, ஆயுதங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க போதுமான போக்குவரத்து இல்லாமல் இருந்தது.

இதற்காக குவே நொய் அல்லது கவாய் நதி பள்ளத்தாக்கில் ரயில்பாதை ஒன்றைக் கட்டமைக்க முடிவு செய்தனர். இன்றைய தாய்லாந்து (அப்போது சியாம்) முதல் மியான்மார் வரை இந்த பாதை அமைந்தது.

1942 மே, ஜூன் மாதங்களில் பவளக் கடல் போர் மற்றும் மிட்வே போர் ஆகியவற்றில் ஜப்பானிய படைகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இதனால் ஜப்பானிய தீவுகளுக்கும் பர்மாவிற்குமான கடல் வழி பாதுக்காப்பாக இல்லை. பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பான் படைகளுக்கு ஆதரவளிக்க தரைவழிப்பாதை தேவைப்பட்டது. இதுவும் ரயில்பாதை கட்டுமானத்தை துவங்க மற்றொரு முக்கிய காரணம்.

நரக கப்பல்கள்.. ஏமாற்றி அழைத்துவரப்பட்ட தமிழர்கள்!

இரண்டாம் உலகப் போரின் தொடக்கக்காலத்தில் ஜப்பான் வெற்றி பெற்று வந்தது. 1942 ஆம் ஆண்டில் சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், டச்சு கிழக்கிந்திய தீவுகளில் உள்ள நேச நாட்டுப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தன.

ஜப்பான் ராணுவம் சிறை பிடிக்கப்படுபவர்களை மிகக் கொடுமையாக நடத்தியது. ஜப்பானிய காவலில் இருந்த பொதுமக்களில் 11% பேரும், போர்வீரர்களின் 27% பேரும் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.

சிறை பிடிக்கப்படும் வீரர்களை அடிமைகளைப் போல எங்காவது உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக 'நரக கப்பல்கள்' என அழைக்கபப்படும் சிறிய கப்பல்களில் அதன் கொள்ளளவுக்கு அதிகமான நபர்களை திணித்து கொண்டு சென்றனர்.

அப்படியாக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து படைவீரர்களாகவும் தொழிலாளர்களாகவும் அடிமைகளாகவும் தமிழர்கள் இந்த ரயில் பாதை பணிக்கு கொண்டுவரப்பட்டனர். பலரிடம் ஜப்பான் அரசு போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து இங்கு பணிக்கு அழைத்து வந்துள்ளது.

மலேசிய ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த இந்தியத் தமிழர்கள் மற்றும் பர்மிய தொழிலாளர்களுக்கு அதிக கூலி கொடுப்பதாக ஆசை காட்டி அழைத்து வந்தனர்.

தோராயமாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த 2,00,000 தொழிலாளிகளை கட்டாயமாகவும், 60,000 த்திற்கும் அதிகமான நேசநாட்டுப் படைகளைச் சேர்ந்த துருப்புகளும் இந்த ரயில்பாதை கட்டுமானத்தில் பலவந்தமாக இறக்கிவிடப்பட்டனர். இப்பணியினை மேற்பார்வையிட 12,000 ஜப்பானிய துருப்புகள் இருந்தன.

அஞ்சி அஞ்சி அடியெடுத்து வைத்த தொழிலாளர்கள்

ஜூன் 1942 முதல் அக்டோபர் 1943 வரை போர்க்கைதிகளும், கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளிகளும் இணைந்து 415 கி.மீ தூரமுடைய ரயில் பாதையை உருவாக்கினர்.

அடர்ந்த காட்டில் ரயில் தடம் அமைக்க கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். அவசியமான கருவிகள் எதுவும் இல்லாமல் சாதாரண கைக் கருவிகளால் வேலை செய்தனர். போதிய உணவு இன்றி, தங்குமிடம், மருத்துவ வசதி இன்றி ஒரு நாளுக்கு 18 மணிநேரம் வரை வேலை செய்ய நிரபந்திக்கப்பட்டனர்.

கொசுக்கள், விஷப் பூச்சிகள் எதற்கும் தீர்வு கிடையாது. சுமார் 16 மாதங்கள் மழை, வெயில் பார்க்காமல், உடனிருந்தவர்கள் இறந்துபோக்கும்போது கூட திரும்பி பார்க்காமல் வேலை செய்தனர். ஒருவேளை திரும்பி பார்த்தால் அடி, உதை எல்லாம் கிடையாது கையை வெட்டி, காலை வெட்டி சித்திரவதை செய்வதுதான் ஜப்பானிய இராணுவத்தின் பழக்கம்.

இந்த காலகட்டத்தில் நோய், உணவின்மை மற்றும் ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட சித்திரவதை மற்றும் தண்டனைகளால் கட்டுமானத்தில் ஈடுபட்ட கைதிகளும், தொழிலாளிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர்.

"நரகத்தீ தாண்டல்"

தாய்லாந்தின் காஞ்சனபுரிக்கு வடமேற்கே சுமார் 72 கிமீ தொலைவில் உள்ள கொன்யுவில் ரயில்பாதை அமைக்கும் பொருட்டு நீளமான ஆழமான தடத்தை வெட்ட வேண்டியிருந்தது. கொன்யுவின் முதல் பகுதியில் 450 மீட்டர் நீளமும், 7 மீட்டர் ஆழமும் கொண்ட தடம் வெட்டப்பட்டது. இரண்டாவது பகுதி 75 மீட்டர் நீளமும், 25 மீட்டம் ஆழமும் கொண்டது. இத்தகைய கடினமான கொடூரமான பணியாக இருந்ததால் இப்பகுதி "நரகத்தீ தாண்டல்" Hellfire Pass என்று அழைக்கப்பட்டது.

“நரகத்தீ தாண்டல்" பகுதியில் வெட்டும் வேலை மெதுவாக நடந்தது என விரைவுபடுத்துமாறு ஜப்பானிய காவலர்கள் உத்திரவிட்டனர். எப்போது பணி திருப்திகரமாக நடக்கவில்லை என்று ஜப்பானியர்கள் கருதினார்களோ அப்போது கைதிகளுக்கு கடும் உடல்ரீதியான தண்டனைகள் கிடைத்தது. இப்பகுதியில் மட்டும் 700 கைதிகள் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.

கடும் உழைப்பின் காரணமாக எலும்புக்கூடாக காட்சியளித்த போர்க்கைதிகள் நோயால் இறந்து போனால் ரயில்பாதை அருகேயே புதைக்கப்பட்டனர். அதில் ஒரு சிலுவை அமைத்து இறந்தவரின் பெயரை தொங்க விட்டனர். இப்படி ரயில் பாதை முழுவதும் இறந்து போனவர்களின் சமாதி இருந்தது.

மலேசியாவில் இருந்து வந்த தமிழர்கள், பர்மியர்கள், ஜாவாவியர்கள் போன்ற ஆசியத் தொழிலாளிகள் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பாதை அமைக்கும் போது இறந்து போயிருக்கின்றனர். புள்ளிவிவரப்படி இறந்து போன தொழிலாளிகளில் 60,000 தமிழர்களும், 30,000 பர்மியர்களும் இருந்தனர். உண்மையான இறப்பு எண்ணிக்கை அதிகமிருக்கும். அதுவும் ஜப்பானிய அரசுக்கு மட்டும் தெரியும்.

இரண்டாம் உலகப்போரில் தோல்வியுற்ற பிறகு இந்த கொடூரங்களை மறைக்க பல ஆவணங்களை ஜப்பான் அழித்தது. ஆனால் இந்த கொடுமைகளை அனுபவித்தவர்கள் உயிருடன் தப்பி சொன்ன சாட்சியங்கள், ஜப்பான் படையினருக்கு தெரியாமல் எழுதப்பட்ட டைரிகள், காட்டுக்கு நடுவே வழக்கத்துக்கு மாறாக ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்த மனித உடல்கள் இந்த கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்