இந்தியா

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

Tamil Selvi Selvakumar

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வரும்  7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரம்:

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.  இதனால் மகராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழகம்உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்க்கிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: 

இந்தநிலையில் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

கனமழை வருவதற்கு வாய்ப்பு:

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், அடுத்த 4 நாட்களுக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ஏனாம் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் கனமழை நீடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிக கனமழையும், நாளை கனமழையும் நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.