இந்தியா

ஒரே நாளில் 190 வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சாதனை...! யார் தெரியுமா?

மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரே நாளில் தனி நீதிபதி ஒருவர் 190 வழக்குகளை விசாரித்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

இந்தியாவில்  ஒவ்வொரு வருடமும் நீதிமன்றங்கள் கோடை விடுமுறை விடப்படும் போது வழக்குகளின் தேக்கம் அதிகரிப்பது வழக்கம். அவ்வாறு மும்பை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை முடிந்து வழக்கமான பணிகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஒவ்வொரு நீதிபதி முன்பும் அதிக அளவிலான வழக்குகள் பட்டியலிடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் மாலை 4.30 மணி வரையுடன் நிறைவடையும் நிலையில் நேற்று நீதிபதி எஸ்.எஸ் ஷின்டே தலைமையிலான அமர்வு இரவு 8 மணி வரை வழக்குகளை விசாரித்துள்ளது. நீதிபதி ஷிண்டே தலைமையிலான அமர்வில் நேற்று 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் அதில் 190 வழக்குகளை நீதிபதி ஷிண்டே விசாரித்துள்ளார். குறிப்பாக கிரிமினல் ரிட் மனுக்கள், ஜாமீன் கோரிய மனுக்கள், ஃபர்லோ மனுக்கள் மீது நீதிபதி விசாரணை நடத்தி உள்ளார். 

முன்னதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே. கதவல்லா ஒரே நாளில் 150 வழக்குகளை விசாரித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனையை நீதிபதி ஷிண்டே முறியடித்துள்ளார்.