இந்தியா

இளம்பெண் மரணம்: ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணியினர் போராட்டம்!

Tamil Selvi Selvakumar

உத்தரகாண்ட் இளம்பெண் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இளம்பெண் கொலை:

பாஜக மூத்த தலைவராக அறியப்பட்ட வினோத் ஆர்யா என்பவரின் மகன் புல்கித் ஆர்யாவுக்குச் சொந்தமான ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக, விடுதிக்குப் பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டார்.

யாரும் தப்பிக்க முடியாது:

தொடர்ந்து இளம்பெண் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், தனது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கூட தப்பிக்க முடியாது என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணியினர் போராட்டம்:

இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடவடிக்கை கோரி கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.