கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவுக்கு சிறப்பு நிர்வாக நீதிபதி (SEM) நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நேற்று புது டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸின் சென்ட்ரல் பூங்காவில், ‘லெஹ்ரா தோ திரங்கா’ போராட்டத்தில் ஈடுபடச் சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) 126 மற்றும் 170 ஆகிய பிரிவுகளின் கீழ், அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
நேற்று இரவு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் அவரைப் பார்க்க முயன்றபோதும், காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், “அபிஜித் எங்கே?” என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்களும் அபிஜித் திப்கே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அபிஜித் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் டெல்லி காவல்துறை அறிவித்தது. அதன்படி, தற்போது நீதிமன்றம் சமாதானப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளது.
CJP செயல்பாட்டாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஏற்கெனவே திகார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. போராட்ட தளம் அல்ல என அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் மூவர்ண கொடி ஏந்தி கோஷம் போட்டாதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை கன்னாட் பிளேஸில் நடைபெற்ற ‘லெஹ்ரா தோ திரங்கா’ போராட்டப் பேரணியின்போது, அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவர் நேகா போராவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார்.
டெல்லி காவல்துறைச் சட்டத்தின் 65-வது பிரிவின் கீழ், காவல்துறையின் அறிவிப்பை மீறியதாக நேஹா போரா கைது செய்யப்பட்டார். அவரைப் பல காவலர்கள் இணைந்து வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் திணிக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
நேகாவையும் வழக்கறிஞர்களோ ஆதரவாளர்களோ சந்திக்கக் காவல்துறை அனுமதிக்கவில்லை. அவர் வெவ்வேறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. நள்ளிரவு வரை காவல்துறை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் தெரிவிக்காத நிலையில், இன்று அதிகாலையில் நேகா விடுவிக்கப்பட்டார்.
ஆனால், தீப்கே மாலை வரை காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தீப்கே விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, CJP தேசியப் பொறுப்பாளர் அஜன்கியா ஷிண்டே, “கரப்பான் பூச்சிகள் ஒருபோதும் இறப்பதில்லை” எனச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அபிஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு நாள் மொபைல், வைஃபை வசதிகள் இல்லாமல் காவலில் இருந்தது வயதானதைப் போன்ற உணர்வைக் கொடுப்பதாகக் கூறும் மீம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 10 அன்று டெல்லி விமான நிலையத்தில், விமானத்திற்குள்ளேயே வைத்து டெல்லி காவல்துறையினர் தீப்கேவைக் கைது செய்தனர். அப்போது, ஓராண்டுக்கு அமைதியைக் குலைக்க மாட்டேன் என அவர் ஒரு பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தார். அப்போது, அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் காவல்துறையினர் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேகா போராவும் அபிஜித் திப்கேவும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) செயல்முறையை நிறுத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். மேலும், அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேகா போரா, “நான் மண்டி ஹவுஸில் தடுத்து வைக்கப்பட்டு, இரவு முழுவதும் அதிகாலை 5 மணி வரை இங்கே (காவல் நிலையத்தில்) வைக்கப்பட்டிருந்தேன்.
“நீங்கள் (காவல்துறையினர்) ஏன் இந்தச் சட்டவிரோதத் தடுப்புக் காவல்களை மேற்கொள்கிறீர்கள்? இந்த நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. இந்தச் சம்பவம் இத்தகைய தடுப்புக் காவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
“சட்டம் ஒழுங்கைப் பின்பற்றுவதாகவும், சட்டப்படி செயல்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி எதுவும் நடப்பதில்லை” என்று தெரிவித்தார்.
“இந்தப் போராட்டத்தின்போது, அவர்கள் (காவல்துறையினர்) மாலையில் மக்களைக் கைது செய்து, மறுநாள் காலையிலோ அல்லது மாலையிலோ விடுவித்து வருகின்றனர். இத்தகைய கைதுகளை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது என்பது எங்களுக்குப் புரியவில்லை.
அபிஜித் திப்கே உட்படக் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மத்திய டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
ஞானேஷ் குமார் முதல் பாஜக அரசு வரை அனைவரும் தங்களது ஆணவத்தைக் கைவிட வேண்டும். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) செயல்முறை நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் டெல்லி மற்றும் இந்திய மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) செயல்முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, தங்களது போராட்டம் தொடரும் என AISA அமைப்பு தெரிவித்துள்ளது.
அபிஜித் திப்கே, நேகா போரா ஆகியோருடன் மேலும் 150 பேர், பொது அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது நாளாக சிறையில் இருக்கும் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா நாளை விடுதலை செய்யப்படுவார்கள் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனது நண்பர்கள் வெளியே வருவதற்காக காத்திருப்பதாக அபிஜித் தீப்கே கூறியுள்ளார்.
நேகா போரா கூறியாதன்படி விரைவில் இளைஞர்கள் போராட்டம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
ஜந்தர் மந்தருக்கு பதில் போராட்ட களமாக அறிவிக்கப்பட்ட ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் வரும் நவம்பர் 1ம் தேதி போராட்ட பேரணி நடத்த டெல்லி காவல்துறையிடம் அனுமதி பெற்றுள்ளது.
இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் விவசாயிகளும் இணைய இருக்கின்றனர். வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) அமைப்பின் கீழ் பல்வேறு விவசாய அமைப்புகள் அக்டோபர் 23 அன்று டெல்லிக்கு பேரணி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நீதிமன்றத்திலும் ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு வலுத்து வருகிறது. தேர்தல் ஆணையரிடம் வைக்கப்பட்டுள்ள புகார்களுக்கு விளக்கம் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
4 முனைகளில் இருந்து ஞானேஷ் குமாருக்கு எதிரான அழுத்தம் எழுவதால் மத்திய அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடும் போலீஸ் பாதுகாப்பு, தடுப்புக்காவல், இணையத் தடை போன்ற நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்!