பெண்களின் பெயரில் சமூக வலைதளங்களில் பழகி, பின்னர் காதல் வலையில் சிக்க வைத்து ரகசியத் தகவல்களைப் பெறுவது உளவு அமைப்புகள் கையாளும் ஒரு முக்கிய உத்தியாக இருந்து வருகிறது. அப்படியொரு வலையில் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் சிக்கியதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணிடம் இருந்து நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக இந்தியாவின் ரகசியப் போர் திட்ட ஆவணங்களையே அவர் பகிர்ந்ததாக டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றிய அந்த அதிகாரி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான பொறுப்பில் இருந்தவர். அவர் மீது ரகசிய ஆவணங்களை வெளிநாட்டு உளவு அமைப்பிடம் பகிர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த மே 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
காவல்துறையின் குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை அந்த அதிகாரி பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபருடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரண நட்பாகத் தொடங்கிய இந்தத் தொடர்பு, பின்னர் ரகசியத் தகவல்களைப் பகிரும் அளவுக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, அந்தச் சந்தேக நபர் அனுப்பிய நிர்வாணப் புகைப்படத்தைப் பெற்ற பிறகு, அதற்குப் பதிலாக ரகசியப் போர் திட்டத்தின் ஒரு பக்கத்தை அந்த அதிகாரி அனுப்பியதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு புகைப்படத்துக்கும் பதிலாகப் போர் திட்டத்தின் புதிய பக்கத்தைத் தருவதாக அவர் உறுதியளித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை இவ்வாறு தனிப்பட்ட விருப்பத்துக்காகப் பகிர்ந்ததாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் ஒரு ஆவணத்துடன் முடிந்துவிடவில்லை. இந்திய விமானப்படையின் ரகசிய ட்ரோன் படைப்பிரிவின் பலம், அதன் அமைப்பு, ட்ரோன் சோதனைகள், ஆயுதங்களின் செயல்பாட்டுத் திறன் உள்ளிட்ட முக்கியத் தகவல்களையும் அவர் பகிர்ந்ததாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் விமானங்களின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய ராணுவப் பகுதிகள் தொடர்பான தகவல்களும் வெளியே சென்றிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதில் மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயம், அந்த அதிகாரி தனது கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றிய ஐந்து ஊழியர்களின் மின்னணு சாதனங்களிலும் உளவு மென்பொருளை நிறுவ முயன்றதாகக் கூறப்படுவதுதான். சந்தேக நபர் அனுப்பிய தீங்கிழைக்கும் செயலிகளைப் பயன்படுத்தி, மற்ற அதிகாரிகளின் செல்போன்களில் உள்ள தகவல்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான தொடர்புகளைப் பெற முயற்சி நடந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. இருவருக்கும் இடையிலான தொடர்பு எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதையும் விசாரணைக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். வாட்ஸ்அப் தகவல்களை ஆய்வு செய்ததில் 3,008 குறுஞ்செய்திகள், 65 புகைப்படங்கள், 42 குரல் அழைப்புகள், 4 வீடியோ அழைப்புகள் மற்றும் 6 இணைய இணைப்புகள் பரிமாறப்பட்டிருந்தது தெரியவந்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி அலுவலகத்துக்குள் செல்போன் எடுத்துச் சென்றது தொடர்பாக அந்த அதிகாரியைச் சோதனை செய்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய விமானப்படையின் உளவுப் பிரிவும் ஏற்கெனவே அவரைக் கண்காணித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறை தனது விசாரணையை முடித்து டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களைப் பாதுகாக்கும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்பட வேண்டிய நிலையில், இந்தச் சம்பவம் ராணுவப் பணியாளர்களை சமூக வலைதளங்கள் வழியாக இலக்கு வைக்கும் உளவு முயற்சிகள் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.