இந்தியா

முன்பக்க டயர் வெடித்து ஆந்திர பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. 7 வயது சிறுமி பலி.. 30 க்கும் மேற்பட்டுார் படுகாயம்!!

நாகை அருகே  முன்பக்க டயர் வெடித்து  ஆந்திர பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 7 வயது சிறுமி பலியானார். மேலும் 30 க்கும் மேற்பட்டுார் படுகாயமடைந்தனர்.

Suaif Arsath

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார். இவர் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். நாகை நாகூர் ஆண்டவர் தர்காவில் வழிபாடு நடத்திய இவர்கள் இன்று வேளாங்கண்ணியில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி சென்ற நிலையில் திருப்பூண்டி காரைநகர் பகுதியில் பேருந்தின் முன்பக்க டயர் அச்சு முறிந்ததில்  நிலைதடுமாறிய பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்தில் பயணித்த அனைவரும் கூச்சலிட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள்  அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பேருந்து இடிபாடுகளில் சிக்கி சாத்விகா என்ற 7 வயது சிறுமி உயிரிழந்தார்.  காயமடைந்த 10 குழந்தைகள் உள்ளிட்ட 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கீழையூர் போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.