இந்தியா

சர்வதேச அரங்கில் தலைகுனிவு! உலகக் கோப்பைக்காக இந்தியா வந்த ஆஸி., வீராங்கனைகளுக்கு நேர்ந்த கொடூரம்! - கைதான ‘காமக்கொடூரன்’

முதலில் அந்த நபர், வீராங்கனைகள் அருகில் வந்து, ஒருவரைத் தவறான முறையில் தொட்டுள்ளார்..

மாலை முரசு செய்தி குழு

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தின் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகளுக்கு நடந்த மிக மோசமான சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில், ஒரு வீராங்கனையை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் தவறான முறையில் தொட்டுத் துன்புறுத்தியதாகவும், மேலும் அவர்களைப் பின்தொடர்ந்து அச்சுறுத்தியதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சர்வதேச அரங்கில் எழுப்பியுள்ளது.

இந்த மோசமான சம்பவம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 23, 2025) காலை 11 மணியளவில் இந்தூரில் உள்ள கஜ்ரானா சாலைப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு உணவகத்திற்குச் (Café) செல்வதற்காக அந்த இரண்டு வீராங்கனைகளும் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வந்த ஒருவர், அவர்களைப் பின்தொடர்ந்து அச்சுறுத்தத் தொடங்கியுள்ளார்.

முதலில் அந்த நபர், வீராங்கனைகள் அருகில் வந்து, ஒருவரைத் தவறான முறையில் தொட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் வீராங்கனை, உடனடியாகத் தனது அணியின் பாதுகாப்புக் குழுவின் (பொறுப்பாளரான டானி சிம்மன்ஸுக்குத் தனது தற்போதைய இருப்பிடத்தைக் குறிக்கும் அவசரகால எச்சரிக்கை செய்தியை (SOS Alert) அனுப்பியுள்ளார். சிறிது நேரத்திலேயே, மற்றொரு வீராங்கனையை அந்த நபர் மீண்டும் தொட்டுத் துன்புறுத்த முயன்றதாகவும், பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புக் குழுவும், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீராங்கனைகளை விடுதிக்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர். ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்புக் குழுவின் மேலாளர் சிம்மன்ஸ், இந்தத் துயரச் சம்பவம் குறித்து வியாழக்கிழமை இரவே காவல் நிலையத்தில் அதிகாரபூர்வப் புகார் அளித்தார். துன்புறுத்தலால் அதிர்ச்சியில் உறைந்திருந்த வீராங்கனைகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த காவல்துறை, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

விசாரணை தொடங்கிய நிலையில், மோட்டார் சைக்கிள் எண்ணை அந்த வழியாகச் சென்ற ஒரு பொதுநபர் குறித்து வைத்திருந்தார் என்ற தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில், தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்ட இந்தூர் காவல்துறை, குற்றம் சாட்டப்பட்ட அகில் கான் (Akil Khan) என்ற நபரை வெள்ளிக்கிழமை இரவே கைது செய்தது. கைது செய்யப்பட்ட அகில் கான் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள மத்தியப் பிரதேச அரசாங்கம், நாட்டிற்குக் களங்கம் ஏற்படுத்திய இந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.