இந்தியா

பூலான் தேவியின் 21வது நினைவு தினம்: பழைய புகைப்படத்துடன் அகிலேஷ் யாதவ் அஞ்சலி 

Malaimurasu Seithigal TV

கொள்ளை ராணி என்று அழைக்கப்படும் பூலன் தேவி, குற்ற உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன், தனது குழந்தை திருமணத்தால் வறுமை, அநீதி, வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர்:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் மக்களவை எம்.பி.யான பூலான் தேவியின் 21-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். முலாயம் சிங் யாதவ் தலைமையிலான மாநில அரசு, 1994 இல் பூலான் தேவி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற்ற பிறகு சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.

”சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி., பூலான் தேவியின் நினைவு நாளில் அவருக்கு பணிவான வணக்கங்கள் மற்றும் அஞ்சலிகள்" என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார். அதனுடன் பூலான் தேவி சைக்கிள் அருகே நின்று 'வெற்றி' அடையாளத்தைக் காட்டும் பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்:

பூலான் தேவியை 'சமூக நீதியின் போர்வீரன்' என நினைவுகூர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் அவரது வீரம் மற்றும் துணிச்சல் குறித்து ட்வீட் செய்துள்ளார். பெண்கள் வீரத்தின் சிறந்த சின்னம் என்று பூலான் தேவியை கூறிய அவர், 'ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் மற்றும் ஏழைப் பெண்களை' பாதுகாப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை மக்களுக்கு நினைவூட்டினார்.

பூலான் தேவி:

1963 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் தேவி. அவருடைய 11 வயதில் அவரை விட மூன்று மடங்கு அதிகமன வயதுடையவரை திருமணம் செய்தார். தனது குழந்தை திருமணத்தின் வறுமை, அநீதி, வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.  கொலை மற்றும் கடத்தல் உட்பட பல குற்றங்களுக்காக அவர் சுமார் பதினொரு ஆண்டுகள் சிறையில் கழித்தார். இருப்பினும் பொதுமக்களிடையே பிரபலமான நபராக இருந்தார்.

பொதுமக்களின் ஆதரவால், தேவி இரண்டு முறை மிர்சாபூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். சமாஜ்வாதி கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டார். 2001 ஆம் ஆண்டில் தேவியின் டெல்லி வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்தவர்களால் துப்பாக்கி சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஜாதிவெறி மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக போராடிய வெற்றி பெண்மணியாக போற்றப்பட்டார்.  2014 இல் டைம் பத்திரிகையின் வரலாற்றில் புகழ்பெற்ற போராட்ட வீரப் பெண்களின்  பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.