Bihar tourism initiative Bihar tourism initiative
இந்தியா

அரசு ஊழியர்களுக்கு ஒரு "நற்செய்தி!" அரசு அதிகாரிகள் கட்டாயம் 2 நாட்கள் சுற்றுலா செல்லவேண்டும் - இந்த நாட்கள் 'அலுவல் பணி'யாக எடுக்கப்படும் என்று உத்தரவு

மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கி வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

பீகார் மாநிலத்தில் சுற்றுலா மற்றும் சூழல் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு புதிய மற்றும் வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கி வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்கள் தங்களது சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள சுற்றுலா, சூழல் சுற்றுலா மற்றும் கிராமப்புற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று இரண்டு நாட்கள் (இரண்டு இரவுகள் உட்பட) தங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பயணத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகள் இடம்பெற வேண்டும் என்றும், அருகிலுள்ள குறைந்தது மூன்று இடங்களை பார்வையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா நாட்கள் “அலுவல் பணிநேரமாகவே” கருதப்படும் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில், இந்தப் பயணத்தின் போது எந்த அதிகாரியும் ஆய்வு கூட்டங்கள் அல்லது கள ஆய்வுகள் போன்ற அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பொது நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி. ராஜேந்தர் பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பு அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள உயரதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பீகாரில் வரலாற்று, கலாச்சார மற்றும் இயற்கை வளங்கள் அதிகம் இருந்தாலும், பல பகுதிகள் சுற்றுலா வரைபடத்தில் போதிய அங்கீகாரம் பெறவில்லை. இதனை மாற்றுவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பயணம் முடிந்து திரும்பிய பிறகு, அதிகாரிகள் தாங்கள் சென்ற இடங்கள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படவுள்ளன.

சுற்றுலாத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன. சுற்றுலா தலங்களில் தங்கும் வசதிகள், உள்ளூர் வீடுகளில் ஹோம்-ஸ்டே வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடுகளை மேம்படுத்துமாறும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும் என்றும், பார்வையாளர்கள் பீகாரின் உண்மையான கலாச்சார அனுபவத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.