இந்தியா

யார் இந்த பில்கிஸ் பனோ? நீதித்துறை மீதான நம்பிக்கையை இழந்தது ஏன்...?

Tamil Selvi Selvakumar

தன் வாழ்வை சீரழித்த 11 பேரின் விடுதலை, நீதித்துறை மீதான நம்பிக்கையை அசைத்து விட்டதாக, பில்கிஸ் பனோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2002 - ல் நடந்தது என்ன:

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில், 11 பேர் கொண்ட கும்பல் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அத்துடன் அந்த பெண்ணின் 3 வயது குழந்தை உள்ளிட்ட 7 பேரை கொலை செய்தனர்.

மர்ம நபர்கள் கைது:

அப்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 11பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். அந்த 11 பேரையும் சிறையில் அடைக்க குஜராத் அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த 11 பேரையும், 15 ஆண்டுகளுக்குப்பின் குஜராத் அரசு விடுவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அறிக்கை:

இந்நிலையில், தனது குழந்தையைக் கொன்று, தன் வாழ்வை சீரழித்த 11 பேரின் விடுதலையால், பேச வார்த்தையின்றி அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பில்கிஸ் பனோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை:

பில்கிஸ் பனோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு, இப்படியும் ஒரு நீதி கிடைக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், நீதித்துறையை எந்த நிலையிலும் நம்பியிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இது தனக்கான போராட்டமல்ல, நாளை பாதிக்கப்படப்போகும் அனைத்து பெண்களுக்குமான போராட்டம் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நீதித்துறை மீதான நம்பிக்கை இழந்து விட்டது:

வழக்கில் கைதான் 11 பேரின் விடுதலைக்கு முன், தன் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படவில்லை எனவும், இது நீதித்துறை மீதான நம்பிக்கையை அசைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு, குஜராத் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பில்கிஸ் பனோ அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.