Amer Araj insurance case 
இந்தியா

கடனில்லாமல் வீடு வாங்கியவருக்கு காப்பீடு மறுக்கப்பட்டது ஏன்? விண்ணப்பத்தில் இருந்த ஒரு தகவலால் ஏற்பட்ட சிக்கல்!

விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு தகவல் பின்னர் மிகப்பெரிய சட்டப் பிரச்சனையாக மாறியது. காப்பீட்டு நிறுவனத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.

மாலை முரசு செய்தி குழு

ஒரு வீட்டை வங்கிக் கடன் எதுவும் இல்லாமல் சொந்தப் பணத்தில் வாங்கிய ஒருவர், அதற்காக வீட்டு காப்பீடு பெற்றுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு வீட்டின் சுவர்கள், ஜன்னல்கள், தரை உள்ளிட்ட பகுதிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கோரியுள்ளார். ஆனால், அவரது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு தகவல் பின்னர் மிகப்பெரிய சட்டப் பிரச்சனையாக மாறியது. காப்பீட்டு நிறுவனத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.

அமெர் அராஜ் (Amer Araj) என்ற அந்த நபர், ஏற்கெனவே குத்தகைதாரர்கள் வசித்து வந்த ஒரு வீட்டை அதன் முந்தைய உரிமையாளரிடமிருந்து நேரடியாக வாங்கியிருந்தார். அந்த வீட்டில் இருந்த குத்தகைதாரர்களை வெளியேற்றுவது தொடர்பாக முன்பு சட்டப் பிரச்சினையும் ஏற்பட்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் வீட்டின் உரிமை அவருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து உறவினர் ஒருவரின் பரிந்துரையின்பேரில் காப்பீட்டு முகவர் ஒருவரை அணுகி வீட்டுக்கான காப்பீட்டைப் பெற முயன்றார். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டியர்பார்ன் ஹைட்ஸ் (Dearborn Heights) பகுதியில் நடைபெற்றது. 2023 நவம்பர் முதல் காப்பீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், 2024 ஜனவரி 1ஆம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு காப்பீடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. விண்ணப்பத்தில் வீடு அடமானக் கடன் இல்லாமல் வாங்கப்பட்டதா என்ற கேள்விக்கு 'இல்லை' என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் வீட்டைக் கடன் ஏதுமின்றி நேரடியாக வாங்கியிருந்தார்.

இதில் முகவர்தான் தவறான பதிலைப் பதிவு செய்ததாக அமெர் நீதிமன்றத்தில் வாதிட்டார். வீட்டை எப்படிப் பெற்றார் என்பதை முகவரிடம் முன்பே தெரிவித்ததாகவும், விண்ணப்பத்தைத் தானே பூர்த்தி செய்யவில்லை என்றும், அதைப் படிக்காமல் கையெழுத்திட்டதாகவும் கூறினார். ஆனால், விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமாறு முகவர் அவருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தியிருந்ததை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. மேலும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்று உறுதிப்படுத்தும் ஒப்புதல் பகுதியிலும் அவர் கையெழுத்திட்டிருந்தார். இந்தத் தவறான தகவல் ஏன் முக்கியமானது என்பதற்கும் காரணம் இருந்தது. காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடன் இல்லாமல் புதிதாக வாங்கப்பட்ட வீடுகளுக்கு காப்பீட்டை உறுதி செய்வதற்கு முன்பாகக் கட்டாய ஆய்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், விண்ணப்பத்தில் கடன் இல்லாமல் வாங்கிய வீடு என்று குறிப்பிடப்படாததால், அந்த ஆய்வு முன்கூட்டியே நடத்தப்படவில்லை. உண்மையான விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தால், ஆய்வு முடியும் வரை காப்பீடு உறுதி செய்யப்பட்டிருக்காது என்று நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2024 ஜனவரி 17ஆம் தேதிதான் அமெர் முதன்முறையாக வீட்டின் உட்புறத்தைப் பார்வையிட்டார். அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு, முந்தைய குத்தகைதாரர்கள் வீட்டின் சுவர்கள், கூரை, தரை, ஜன்னல்கள், குளியலறை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேதப்படுத்தியதாகக் கூறி ஜனவரி 22ஆம் தேதி காப்பீட்டு இழப்பீடு கோரினார். இதையடுத்து காப்பீட்டு நிறுவனம் விசாரணை நடத்தி, ஜூன் 18ஆம் தேதி அவரது பாலிசியை ரத்து செய்தது. செலுத்திய காப்பீட்டுத் தொகையையும் திருப்பி வழங்கியது. இந்த முடிவை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்துக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து மிச்சிகன் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் அவர் முறையிட்டார். ஆனால், 2026 நவம்பர் 23ஆம் தேதி வெளியான தீர்ப்பில், விண்ணப்பத்தில் முக்கியமான தகவலைத் தவறாகக் குறிப்பிட்டு காப்பீடு பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கீழமை நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்தது.

முகவர் விண்ணப்பத்தைத் தயாரித்திருந்தாலும், அதில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து கையெழுத்திட வேண்டிய பொறுப்பு விண்ணப்பதாரருக்கும் உண்டு என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது குறிப்பிட்ட வழக்கில் வழங்கப்பட்ட, வெளியிடப்படாத தீர்ப்பு என்பதால் மற்ற வழக்குகளுக்கு கட்டாய முன்னுதாரணமாக அமையாது. இருப்பினும், காப்பீடு பெறும்போது ஒரு சிறிய தகவல் தவறாக இருந்தாலும் அது பின்னர் பெரிய சட்டப் பிரச்சினையாக மாறக்கூடும் என்பதற்கான முக்கிய உதாரணமாக இந்த வழக்கு அமைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.