சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முறையைச் சுற்றியுள்ள சர்ச்சை, தற்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 18 வயது மாணவர் சர்தக் சித்தாந்த். சிபிஎஸ்இ பயன்படுத்திய 'ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம்' (OSM) என்ற டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சர்தக் குற்றம் சாட்டியிருந்தார். தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களைப் பெற்றபோது, சில தாள்களின் நகல்கள் தெளிவில்லாமல் இருந்ததுடன், சில இடங்களில் தகவல்கள் முழுமையற்றதாகவும் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனது தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆராய்ச்சி திறனின் மூலம் ஓஎஸ்எம் திட்டத்துடன் தொடர்புடைய டெண்டர் நடைமுறைகளை சர்தக் ஆய்வு செய்தார். தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவில், விடைத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விதத்தில் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு கல்வி தொழில்நுட்ப நிறுவனத்துக்கு சாதகமாக, டெண்டருக்கான தகுதி மற்றும் தொழில்நுட்ப நிபந்தனைகள் பல கட்டங்களில் மாற்றப்பட்டதாக அவர் கூறினார். தொடர்ச்சியான டெண்டர் செயல்முறைகளில் விதிமுறைகள் மாற்றப்பட்டதன் இறுதியில், அந்த நிறுவனமே ஒப்பந்தத்தைப் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் வகையில், டெண்டர் செயல்முறையின் காலவரிசை விவரங்களையும் சர்தக் வெளியிட்டார். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கும் நோக்கில் நடைமுறைகள் மாற்றப்பட்டதாக அவர் கூறினார். எனினும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் சிபிஎஸ்இ நிர்வாகமும் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தன. ஆனால் சர்தக்கின் ஆய்வு அறிக்கை மற்றும் வலைப்பதிவு பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், இந்த விவகாரம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களிலும் கவனத்தைப் பெற்றது.
இதையடுத்து, காங்கிரஸ் மூத்த எம்பி திக்விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, சர்தக்கை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அழைத்தது. நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் சர்தக் தனது கண்டுபிடிப்புகளையும் சந்தேகங்களையும் விரிவாக விளக்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் உள்ளிட்ட கல்வி அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே, சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், ஓஎஸ்எம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய ஒருநபர் விசாரணைக் குழுவை அமைக்கவும் கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. ஒரு மாணவர் எழுப்பிய கேள்விகள், நாட்டின் மிகப்பெரிய கல்வி வாரியங்களில் ஒன்றின் செயல்முறைகள் குறித்து தேசிய அளவிலான விவாதத்தை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்