இந்தியா

அரசு பத்திரங்களை விற்பனை செய்வதற்கான ஏலத்தை அறிவித்தது மத்திய அரசு

26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பொதுத்துறை நிறுவன பத்திரங்களை தனியாருக்கு ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Malaimurasu Seithigal TV

26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பொதுத்துறை நிறுவன பத்திரங்களை தனியாருக்கு ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், மின் உற்பத்தி, மின் விநியோகம், இயற்கை எரிவாயு குழாய், விளையாட்டு மைதானங்கள், ரியல் எஸ்டேட் என அரசு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு போகவுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தார். மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பொதுத்துறை நிறுவன பத்திரங்களை தனியாருக்கு ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏலம் வரும் 17 ஆம் தேதி மும்பையில் உள்ள ரிசர்வ வங்கி அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் வடிவில் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவுள்ளதாகவும் ஏல முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.