பாஜகவின் ஓபிசி மொர்ச்சா மாநில செயலாளர் ரெஞ்சித் ஸ்ரீநிவாசன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கேரளாவில் அடுத்தடுத்து நடந்த இரு கொலைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலப்புழாவில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சிலரே நடத்தியிருக்க கூடும் என எஸ்டிபிஐ கட்சியினர் சந்தேகித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை பாஜகவின் ஓபிசி மொர்ச்சா மாநில செயலாளர் ரெஞ்சிஜ் ஸ்ரீநிவாசன் வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் அவரை படுகொலை செய்துவிட்டு சென்றது.
இந்த இரு கொலைகளை தொடர்ந்து, ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு வேறு கொலை சம்பவங்களுக்கும் முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.