இந்தியா

விறுவிறுப்பான தேர்தல்...ஜனநாயகக் கடமையாற்றினார் முதலமைச்சர் மாணிக் சாஹா...!

Tamil Selvi Selvakumar

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் மாணிக் சாஹா தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.


வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக ஒருபுறம், காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கட்சிகள் மறுபுறம் என இன்றைய சட்டப்பேரவைத் தேர்தலில் இருமுனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி 60 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதியிலும் களமிறங்கியுள்ளன. தொடர்ந்து தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், 1100 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறிந்து, அந்த வாக்குச்சாவடிகளில் 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் உட்பட 31 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று  வாக்களித்து வருகின்றனர். அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 13 புள்ளி 23 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அகர்தலா வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடைமையை ஆற்றிய முதலமைச்சர் மாணிக் சஹா, அனைவரும் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.