நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது 2-வது அலைக்கு பின் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்து வந்த நிலையில், திடீரென கடந்த சில தினங்களாக இந்த தொற்று பாதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவிலும் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, முதல் அலையில் உயிரிழந்தோர் பலரது விவரங்களை கேரளா அரசு மறைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரான வீணா ஜார்ஜ், மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், மற்றவர்களுக்கு தொற்றினை பரப்பும் எண்ணம் கேரளா அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களை போல் உயிரிழந்தோர் தகவலை மறைத்து வெளியிடாமல், நேர்மையாக கேரளா அரசு கொரோனா உயிரிழப்பு தகவல்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே பாராட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 43 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியின் முதல் டோஸினை செலுத்தியுள்ளதாக கூறிய அவர், அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 90 சதவீதம் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது தொற்று பரவலை கட்டுப்படுத்துவதுடன், உயிரிழப்பை முடிந்த வரை தடுப்பதுமே கேரளா அரசின் நோக்கம் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.