இந்தியா

இறந்த மாமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதால் பதவி பறிப்பு! காங்கிரஸ் நிர்வாகிக்கு நேர்ந்த அதிர்ச்சி!

டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்துக்குச் செல்ல முடியாத நிர்வாகி ஒருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்

மாலை முரசு செய்தி குழு

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்பது நிர்வாகிகளுக்கு முக்கியமான பொறுப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமை எதிர்பார்க்கும். ஆனால், குடும்பத்தில் ஏற்படும் துயரமான நிகழ்வுகளைக்கூட பொருட்படுத்தாமல் கட்சிப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சியில் நடந்துள்ள ஒரு சம்பவம்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியான இந்திய இளைஞர் காங்கிரஸில், கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், தனது மாமாவின் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்வில் பங்கேற்றதற்காக டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்துக்குச் செல்ல முடியாத நிர்வாகி ஒருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் பேசினர். இந்தக் கூட்டத்திலும், அதற்கு முன்னதாக நடைபெற்ற பேரணியிலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் யாரும் தவறக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

கூட்டத்தில் யார் பங்கேற்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக டிஜிட்டல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லியின் மின்டோ சாலையில் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பார்கோடு ஸ்கேனர்கள் வைக்கப்பட்டன. மேலும், 'With IYC' என்ற அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலமாகவும் நிர்வாகிகளின் வருகைப் பதிவு கண்காணிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரோஹித் ராஜோரியா, கூட்டத்தில் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை முன்கூட்டியே கட்சித் தலைமையிடம் தெரிவித்திருந்ததாகக் கூறியுள்ளார். அவரது மாமா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கான 13ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்தது. இதனால் டெல்லிக்குச் செல்ல முடியாது என்பதை முன்கூட்டியே தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்காத காரணத்தால் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரோஹித், கட்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். கட்சிப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகத் தன்மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று முதல் நான்கு முறை சிறைக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த ஒருவரை, ஒரே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதற்காக எந்த விளக்கமும் கேட்காமல் பதவியிலிருந்து நீக்கியது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நடவடிக்கை ரோஹித்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. இதுவரை ஏழு மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தது 185 இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 60 பேரும், குஜராத்தில் 49 பேரும், மேற்கு வங்கத்தில் 26 பேரும் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். தெலங்கானாவில் 14 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 13 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 13 பேரும், ஹரியானாவில் 10 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 500 வரை செல்லக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை குறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் விளக்கம் அளித்துள்ளார். கட்சியின் தெளிவான அறிவுறுத்தல்களையும் மீறி சில நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றும், அமைப்பில் ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் உறுதிப்படுத்துவதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றதாகக் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், செயலியில் பதிவான வருகைப் பதிவு 2,831 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள இணைப்புச் சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த போதிய அறிவின்மை காரணமாகப் பலரின் வருகைப் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வரவில்லை என்று பாஜக விமர்சித்துள்ளது. ராம்லீலா மைதானத்தில் சுமார் 40 சதவீத இடங்கள் காலியாக இருந்ததாக பாஜக எம்.பி. சம்பித் பத்ரா குற்றம்சாட்டியுள்ளார். ஒருபுறம் கட்சியின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு முக்கியம் என்று தலைமை வலியுறுத்தும் நிலையில், மறுபுறம் குடும்பத்தின் துயரமான சூழலுக்குக்கூட இடமளிக்காமல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியா என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.