இந்தியா

மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து! 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு காட்டிய அதிரடி!

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளைப் பரிந்துரைக்கவோ

Muthu Lakshmi

மத்திய அரசு, 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளைத் திருத்தியுள்ளது. மருந்துகளின் பிரிவிலிருந்து 'சிரப்' என்ற வார்த்தையை நீக்கியதன் மூலம், தற்போது  சிரப் அடிப்படையிலான மருந்து கலவைகள் மீது கடுமையான ஒழுங்குமுறை மேற்பார்வை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, இருமல் சிரப்கள் உட்பட சில சிரப்களை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வது இனி தடை செய்யப்படும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. 

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருந்துகள் விதிகள், 2026 மூலம் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, அரசாங்கம் அட்டவணை K-இலிருந்து “சிரப்கள்” என்ற வார்த்தையை நீக்கியுள்ளது. இந்த, விதிகளின் கீழ் விலக்கு பெறத் தகுதியான மருந்துகளின் பட்டியல் சுருக்கபட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த தகவல்களைத் தொடர்ந்து, இருமல் மற்றும் வாய்வழி திரவ மருந்துகள் மீதான ஒழுங்குமுறை சரி செய்யும் நோக்கில் இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் உரிமம் இல்லாத கிராமப்புற  மெடிக்கல் ஷாப் மூலம் இருமல் மருந்து கிடைப்பதைக் கட்டுப்படுத்துவது மற்றும் விநியோகத்தை சுற்றியுள்ள நிபந்தனைகளைக் கடுமையாக்குவது உள்ளிட்ட, கடுமையான விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இதுபோன்ற மருந்துகளைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்புகளை வலுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தியாவின் தேசிய மருந்துப் பட்டியல் (NFI) 2026 வரைவின் ஒரு பகுதியாக, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளைப் பரிந்துரைக்கவோ வழங்கவோ கூடாது என்றும், மருத்துவ ரீதியாக மிகவும் அவசியமானால் மற்றும் மருத்துவர்களால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாய்வழி திரவ மருந்து வடிவங்களில் உள்ள கலப்படம் குறித்து கவலைகள் மற்றும் கடுமையான சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய டையெத்திலீன் கிளைக்கால் (DEG), எத்திலீன் கிளைக்கால் (EG) போன்ற நச்சுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை தொடர்ந்து, இந்த கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் தொடரப்பட்ட இருமல் மருந்து மரண வழக்கு மற்றும் அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் மத்திய பிரதேசத்தில் கலப்பட இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஜூன் 15 விசாரணைக்கு வந்தது. அதன் விளைவாக இந்த அறிவிப்பை மத்திய அரசு மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.