Gorakhpur rabies scare 
இந்தியா

"கோவில் தீர்த்தத்தில் 'ரேபிஸ்' தொற்று?" - 450 பேருக்கு அதிரடியாக செலுத்தப்பட்ட தடுப்பூசி! பசுவின் மர்ம மரணத்தால் பீதியில் மக்கள்

பால் கறக்கப்பட்ட பசு சந்தேகத்திற்கிடமான விதத்தில் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், துர்கா பூஜையின் போது பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட 'சரணாம்ருதத்தை' (கடவுளின் பாதத்தில் வைத்து வணங்கி அருந்தும் தீர்த்தம்) உட்கொண்ட சுமார் 450 பேருக்கு, 'வெறிநாய்க்கடி தடுப்பூசி' போடப்பட்டதாக அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். பால் கறக்கப்பட்ட பசு சந்தேகத்திற்கிடமான விதத்தில் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையானது கடந்த அக்டோபர் 21 அன்று கோலா வட்டாரத்தில் உள்ள தாடி காஸ் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், கடந்த அக்டோபர் 20 அன்று சமூக சுகாதார மையத்தில் (CHC) சுமார் 50 பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில், புதன்கிழமை நடைபெற்ற முகாமில் மேலும் 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அந்தப் பசுவின் பால் இரண்டு கடைகளுக்கும் பல வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டதால், தாடி காஸ் மற்றும் அதன் அருகிலுள்ள கோவிந்த்பூர் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

பசுவின் உரிமையாளரான நவாமி யாதவ், செவ்வாயன்று அவரது பசுவின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு, ஒன்று, இரண்டு நாட்களாக அந்த பசு உடல்நலக்குறைவாகக் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அவர் தனியார் கால்நடை மருத்துவர்களான பெச்சன் சிங் மற்றும் ஹர்தேவ் யாதவ் ஆகியோரையும், தாடி காஸ் கால்நடை மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரையும் கலந்தாலோசித்துள்ளார்.

பின்னர், "பசுவை நாய் கடித்திருக்கலாம்" என கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த பசு அசாதாரணமாக நடந்துகொண்டு குரைக்கத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை மாலை இறந்துவிட்டதாக பசுவின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, துர்கா பூஜையின் போது 'சரணாம்ருதத்தை' உட்கொண்ட பக்தர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். மேலும், சுகாதாரத் துறை குழுவினர் கடந்த புதன்கிழமை அன்று அந்த கிராமத்திற்கு வந்து, முகாமிட்டு தடுப்பூசிகளை மக்களுக்கு போட்டுள்ளனர்.

மக்கள் 'தடுப்பூசி அவசியமா?' என்பதைத் தீர்மானிக்க மருத்துவ நிபுணர்களை அணுகுமாறும், பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையைப் பின்பற்றுமாறும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு சமூக சுகாதார மையப் பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சுகாதார மையத்தில் தடுப்பூசிகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் பொறுப்பாளர், "பாலை அருந்துவதற்கு முன் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்" என்றும், அதனை "பச்சையாக அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

தாடியில் பணிபுரியும் கால்நடை மருத்துவர், பசுவின் அறிகுறிகள் வெறிநாய்க்கடி நோயின் சந்தேகத்தை எழுப்பியதாகவும், ஆனால் அறிகுறிகளை மட்டும் கொண்டு நோயை உறுதிப்படுத்த முடியாது என்றும் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளார். காரணத்தைக் கண்டறிய கால்நடை மருத்துவ மதிப்பீடும் உரிய பரிசோதனைகளும் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பால் குடிப்பதன் மூலம் மட்டுமே 'ரேபிஸ்' பரவும் என்று கூறி விடமுடியாது. இருப்பினும், உமிழ்நீர் அல்லது தொற்று ஏற்படுத்தக்கூடிய பிற பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என கால்நடை மருத்துவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.